Site icon என். சொக்கன்

என்றார் ரஷ்டி

ஒரு கதையில் இரண்டு பேர் ஒரு பக்கம்முழுக்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களில் எந்த வசனத்தை யார் பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக ‘என்றான் ரமேஷ்’, ‘என்றான் சுரேஷ்’ என்றெல்லாம் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையே இருக்கக்கூடாது என்கிறார் சல்மான் ரஷ்டி*.

இதைக் கேட்டபோது முதலில் அதிர்ச்சியாக இருந்தது, இதுபோன்ற வழிகாட்டுதல்கள் இல்லாவிட்டால், யார் எதைப் பேசுகிறார்கள் என்பதே வாசகனுக்குச் சரியாகப் புரியாமல் குழப்பமாகிவிடாதா?

அப்படிக் குழப்பமே வராதபடி, வசனத்தைக் கேட்டதும் அதை யார் பேசியிருப்பார்கள் என்று வாசகன் சட்டென்று புரிந்துகொள்ளும்படி ஒவ்வொரு பாத்திரத்தின் ‘பேசும் தன்மை’யையும் எழுத்தாளன் முன்கூட்டியே ஆராய்ந்து தீர்மானித்திருக்கவேண்டும், தெளிவாக வரையறுத்திருக்கவேண்டும் என்கிறார் ரஷ்டி. அவருடைய ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் இப்படி நெடுநேரம் சிந்தித்துத் திட்டமிடுவாராம்: இந்தப் பாத்திரம் எப்படிப் பேசும்? நீளமாகவா? சுருக்கமாகவா? கெட்ட வார்த்தைகள் உண்டா? இவருடைய வார்த்தை வளம் எப்படிப்பட்டது?… இதையெல்லாம் முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு எழுதத் தொடங்கினால் ‘என்றான் ரமேஷ்’கள் தேவைப்படாது.

இந்த வரையறையை மனத்தில் வைத்துக்கொண்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுடைய சில சிறந்த கதைகளை, பாத்திரங்களை மனத்துக்குள் ஓட்டிப்பார்த்தேன். அவை அனைத்திலும் இந்த அம்சம் கச்சிதமாக அமைந்திருப்பது புரிந்தது, ஒரேமாதிரி பேசுகிற பாத்திரங்கள் இல்லாதபோது கதைக்குச் சட்டென்று ஒரு புது வண்ணமும் சேர்ந்துவிடுகிறது.

(*2015ல் சார்லி ரோஸுக்கு ரஷ்டி வழங்கிய ஒரு பேட்டியில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.)

Exit mobile version