Site icon என். சொக்கன்

கற்றல் சுகம் (4)

சிறுவயதில் (இப்போதும்) எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கும் பழக்கம் இல்லை. டீக்கடையில் பார்ப்பேன், மெல்லப் புரட்டுவேன், திரைப்பட விளம்பரங்களைப் பார்ப்பேன், சில தலைப்புச்செய்திகளைப் படிப்பேன், அதற்குமேல் நானோ என்னைச் சுற்றியிருந்தவர்களோ செய்தித்தாளுக்குப் பெரிய முக்கியத்துவம் தந்ததில்லை.

ஆனால், கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கத் தொடங்கியபிறகுதான், செய்தித்தாள் படிப்பதையே ஒரு வேள்வியைப்போல் செய்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். இவர்கள் நாள்தோறும் காலையில் செய்தித்தாளைப் பிரித்துக்கொண்டு அமர்ந்துவிடுவார்கள், பக்கத்தில் அகரமுதலியோ ஒரு நோட்டுப்புத்தகமோ இவை இரண்டுமோ இருக்கும், ஒவ்வொரு செய்தியையும் நிதானமாகப் படிப்பார்கள், தெரியாத சொற்களுக்கு அகரமுதலியில் பொருள் தேடிப் புரிந்துகொள்வார்கள், கடினமான சொற்களைப் பொருளோடு எழுதிவைத்துக்கொள்வார்கள். ஒரு நாளைக்கு இப்படி ஐந்து கடினமான சொற்களையேனும் சந்தித்துவிடவேண்டும் என்பதை ஓர் இலக்காகவே வைத்துக்கொண்டு செய்தித்தாள் படிக்கிறவர்களும் உண்டு.

மிகுந்த பொறுமையும் உழைப்பும் தேவைப்படுகிற இந்தப் பழக்கம் எனக்கு அப்போது சரிப்படவில்லை. அதைவிட முக்கியமாக, என்னுடைய ஆங்கிலச் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆகவே, இந்த நண்பர்களையோ அவர்களுடைய இந்தப் பழக்கத்தையோ நான் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை.

ஆனால் இன்றைக்கு, கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு வேலையை நான் டிஜிட்டல் கருவியொன்றின் உதவியுடன் செய்கிறேன். நான் இணையத்தில் எதைப் படித்தாலும் சரி, அதில் எந்தக் கடினமான சொல் இருந்தாலும் சரி, அதை இருமுறை க்ளிக் செய்தால் போதும், Google Chrome Dictionary Extension என்கிற நீட்சி எனக்கு அந்தச் சொல்லின் பொருளைத் தந்துவிடும். அத்துடன், அந்தச் சொல்லை வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் என்கிற இணைச்சொற்களையும் (Synonyms) பட்டியலிடும். அதை அந்தச் சொற்றொடரின் பின்னணியுடன் பொருத்திப் புரிந்துகொள்வேன்.

சரி, இப்படிப் பொருள் கற்கிற சொற்களெல்லாம் மனத்தில் நிற்குமா?

அந்த நேரத்தில் என்னுடைய நோக்கம், அந்தச் சொல்லின் பொருளைத் தெரிந்துகொள்வதும், அதன்மூலம் அந்தச் சொற்றொடரைப் புரிந்துகொள்வதும்தான். ஆகவே, அதைத் தாண்டி அதை மனத்தில் வைத்திருக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.

அதே நேரம், சில சொற்கள் திரும்பத் திரும்ப வரும், நான்கு அல்லது ஐந்து முறை அவற்றின் பொருளைப் பார்த்தவுடன், அப்படியே மனத்தில் நின்றுவிடும். அதன்பிறகு (அந்தச் சொற்களுக்கு) அகரமுதலியைத் தேடவேண்டியிருக்காது.

ஆக, நான் இப்படி ஆயிரம் சொற்களைக் கண்டால், அவற்றில் ஐம்பதோ என்னவோ நினைவில் சென்று தங்கும், மற்றவை இந்தக் காதில் நுழைந்து, தன் வேலையைச் செய்துவிட்டு அந்தக் காதின் வழியே சென்றுவிடும், தேவையுள்ளதை நாம் நினைவில் வைத்துக்கொள்வோம்.

ஆனால், ஒரு சொல்லின் பொருள் தெரிந்துவிட்டதால்மட்டும் அந்தச் சொல்லைப்பற்றிய அனைத்து விஷயங்களும் நமக்குத் தெரிந்துவிடுவதில்லை. இதன்மூலம் நாம் அறியா நிலையிலிருந்து பெயரறிந்த நிலைக்கு நகர்கிறோம், அவ்வளவுதான். அதற்குமேல் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் வேறுவிதமான அணுகுமுறை தேவைப்படும்.

நாம் அறியா நிலையிலிருக்கும் சொற்கள் எப்படியெல்லாம் நம் வழியில் தோன்றுகின்றன?

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

Exit mobile version