கற்றல் சுகம் (3)

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், பேச்சுவாக்கில் அவர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, ‘இதைப் படித்திருக்கிறாயா?’ என்று கேட்கிறார். இதற்கு நீங்கள் சொல்லக்கூடிய பதில் என்னவாக இருக்கும்?

1. ‘ம்ஹும், இப்படி ஒரு புத்தகத்தைக் கேள்விப்பட்டதே இல்லை!’

2. ‘இந்தப் பெயரில் ஒரு புத்தகம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அது எதைப்பற்றியது என்று தெரியாது.’

3. ‘கேள்விப்பட்டிருக்கிறேன், அது என்ன வகைப் புத்தகம் என்று அறிவேன். ஆனால், படித்ததில்லை.’

4. ‘படிக்கத் தொடங்கினேன், இன்னும் முடிக்கவில்லை.’

5. ‘முழுமையாகப் படித்துவிட்டேன்.’

6. ‘படித்துவிட்டேன், அதில் கற்றுக்கொண்ட விஷயங்களை உள்வாங்கிப் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டேன்.’

யோசித்துப்பார்த்தால், உலகில் எந்தப் புத்தகத்தையும் இந்த ஆறு வகைகளில் தொகுத்துவிடலாம். எனக்கு முதல் வகையில் இருக்கும் புத்தகம் உங்களுக்கு ஆறாவது வகையில் இருக்கலாம், இன்னொருவருக்கு மூன்றாவது வகையில் இருக்கலாம், இப்படி இருக்கிற இடம்தான் மாறுமேயன்றி, ஒரு புத்தகத்தை நாம் அறிகிற நிலைகள் இவைதாம்.

கற்றலும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஆறு நிலைகளைதான் கடந்துவருகிறது. நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் இருக்கிற அனைத்துத் தலைப்புகளையும் இவ்வகைகளில் தொகுத்துவிடலாம்:

1. அறியா நிலை (அப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது)

2. பெயரறிந்த நிலை (அப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியும், ஆனால் வேறு ஒன்றும் தெரியாது)

3. மேம்போக்கான அறிவு நிலை (அது என்ன விஷயம் என்பது தெரியும், ஆனால் ஆழமாகத் தெரியாது)

4. ஓரளவு அறிந்த நிலை (‘ஓரளவு’ என்பது எந்த அளவு என்பதைப் பொறுத்து இதில் பல உள் அடுக்குகள் உண்டு. 500 பக்கப் புத்தகத்தை 5 பக்கம் படித்தவரும் 400 பக்கம் படித்தவரும் வெவ்வேறு அளவில் அந்நூலை அறிந்திருப்பார்களல்லவா? அதைப்போலதான்)

5. நன்கு அறிந்த நிலை (இதிலும் பல உள் அடுக்குகள் உண்டு. ‘ஓரளவு’ என்பதைப்போலவே, ‘நன்கு’ என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அத்துடன், ஆழம் செல்லச் செல்ல, இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளது புரியும். ஆக, ஒருவிதத்தில் இது முடிவற்ற நிலை எனலாம்)

6. கற்றதைப் பயன்படுத்தும் நிலை (படிப்படியாக நகர்கிற மற்ற ஐந்து நிலைகளிலிருந்து இது சற்று வேறுபட்டது. எந்தப் படியிலிருந்தும் இந்த நிலைக்குத் தாவலாம், தாவாமலேயும் இருக்கலாம், 1 நாள் பயிற்சியைக் கொண்டு வேலையில் இறங்குகிறவர்களும் உண்டு, பல ஆண்டுகள் பயிற்சியெடுத்தபிறகும் உள்நுழையத் தயங்குகிறவர்களும் உண்டு. இன்னொரு முக்கியமான வேறுபாடு, கற்றவை அனைத்தையும் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அரசியலைப்பற்றித் தீவிரமாகப் படித்துத் தெரிந்துகொள்கிற எல்லாரும் கட்சி தொடங்கப்போவதில்லை, தேர்தலில் நிற்கப்போவதில்லை, மேடையேறிப் பேசப்போவதில்லை. தெரிந்துகொள்வதே இன்பம் எனும்போது இந்த ஆறாம் நிலை தேவைப்படாது.)

இந்த ஆறு நிலைகளின் அடிப்படையில் நாம் என்ன கற்றிருக்கிறோம் என்று சிந்தித்தால், முதல் நிலையில் பல கோடி விஷயங்கள் உள்ளன, அதாவது, கோடிக்கணக்கான விஷயங்கள் இருப்பதே தெரியாமல் நாம் இருக்கிறோம், அதில் எந்தத் தவறோ அவமானமோ இல்லை, எல்லாரும் அப்படிதான், தெரிந்தவற்றைவிடத் தெரியாதவைதான் மிகுதி.

மறுமுனையில், ஐந்தாம் அல்லது ஆறாம் நிலையில் நாம் நன்கு அறிந்தவை என்று சில நூறு(?) விஷயங்கள் இருக்கலாம், மற்ற அனைத்தும் இவற்றுக்கிடையில் அமைந்திருக்கும், நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்து அவை படிப்படியாக முன்னேறும், அல்லது, நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடும்.

இந்த “முன்னேற்றும் முயற்சி”, ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறுவிதமாக அமையும். அதாவது, முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குச் செல்வதற்குச் சில குறிப்பிட்ட உத்திகள் பயன்படும். ஆனால், அவற்றைப் பயன்படுத்தி நான்காம் நிலையிலிருந்து ஐந்தாம் நிலைக்குச் செல்ல இயலாது. அதற்கு வேறு உத்திகள் தேவைப்படும்.

ஆக, கற்றலுக்கென்று நம்மிடம் ஒரே ஒரு கருவி இருந்தால் போதாது, ஒரு கருவிப்பெட்டியே (toolbox) வேண்டும். தேவை, இடம், கிடைக்கிற நேரம், சூழ்நிலை ஆகிய பல விஷயங்களைப் பொறுத்துச் சரியான கருவியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவேண்டும்.

இப்போது, அந்தக் கருவிப்பெட்டிக்குள் சற்று நுழைந்து பார்ப்போம்.

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *