Site icon என். சொக்கன்

கற்றல் சுகம் (5)

சில நாட்களுக்குமுன்னால், முக்கியமான அலுவலகக் கூட்டமொன்றில் கலந்துகொண்டேன். அதில் பேசிய மேலாளர் ஒருவர் பேச்சுவாக்கில், ‘Let us timebox it’ என்றார்.

‘Timebox’ என்ற பயன்பாட்டை நான் அதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. நேரம், பெட்டி என்று அதிலுள்ள சொற்களுக்குப் பொருள் தெரிந்தாலும், அவற்றைத் தொகுத்து அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை. ஆகவே, அவர் எங்களிடம் (அதாவது, மற்ற பங்கேற்பாளர்களிடம்) என்ன எதிர்பார்க்கிறார் என்பதும் விளங்கவில்லை.

இது அந்த மேலாளருடைய பிழை இல்லை. அவருடைய குழுவில் அல்லது இதற்குமுன் அவர் வேலை செய்த சூழலில் Timeboxing என்பது மிக இயல்பான ஒரு விஷயமாக இருந்திருக்கலாம். ஆகவே, அவர் அதைப் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகிறார், அது மற்றவர்களுக்குப் புரியும் என்று எண்ணிக்கொள்கிறார், அந்த ஊகத்தின் அடிப்படையில் தொடர்ந்து பேசுகிறார்.

ஆகவே, இந்த இடத்தில் குறுக்கிட்டுத் தெளிவு பெறவேண்டியது எங்கள் கடமையாகிறது, ‘டைம்பாக்ஸிங்ன்னா என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று கேட்டால் அவர் அரை நிமிடத்தில் அந்த அடிப்படையை விளக்கிவிட்டுத் தன்னுடைய அடுத்த கருத்தைப் பேசுவார், அப்போது அந்த அடுத்த கருத்து எங்களுக்குத் தெளிவாகப் புரியும், குழப்பத்துக்கு இடமிருக்காது.

இவையெல்லாம் தெரிந்தும்கூட, நான் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. நம்மில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் அப்படிதான் செய்திருப்போம். ஏன்?

‘நாம் எல்லாம் அறிந்தவர்கள்’ என்று பிறர் நம்மைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, ‘டைம்பாக்ஸிங்ன்னா என்ன?’ என்று கேட்டால் அந்தப் பிம்பம் உடைந்துவிடுமோ, இவர்கள் நம்மை முட்டாள் என்று கருதிவிடுவார்களோ, ‘அட, இதுகூடத் தெரியாதா?’ என்று எல்லாரும் முகம் சுளிப்பார்களோ என்றெல்லாம் தயங்குகிறோம். ஆகவே, எல்லாம் புரிந்ததுபோல் தலையாட்டிவைக்கிறோம், அல்லது, அதற்கு இதுதான் பொருள் என்று அரைகுறையாக எதையோ ஊகித்துக்கொள்கிறோம்.

இந்தப் பழக்கத்தால் நம்முடைய அறிவாளித் தோற்றம் ஒருவேளை காப்பாற்றப்படலாம். ஆனால், அதனால் ஏற்படுகிற பாதிப்புகளோடு ஒப்பிடும்போது, நாம் பெறுவதைவிட இழப்பது மிகுதி.

எடுத்துக்காட்டாக, அன்றைய கூட்டத்தில் அப்போதே அந்தச் சொல்லின் விளக்கத்தைக் கேட்டுப் பெறாததால், அதையடுத்து அவர் பேசிய முக்கியமான விஷயங்களையெல்லாம் நான் புரிந்துகொள்ளவில்லை, அல்லது, அரைகுறையாகப் புரிந்துகொண்டேன், இதனால் என்னுடைய பணி சிறிதளவோ பெரிய அளவிலோ பாதிக்கப்பட்டிருக்குமில்லையா?

இத்தனை பிரச்னைக்கும் என்ன அடிப்படை? நமக்குத் தெரியாத விஷயங்களைப்பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒரு பொது அவையில் கேள்விகளை எழுப்புவது தவறு என்று என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிற நம்பிக்கைதான். இதன்மூலம் கூட்டத்தார் என்னைப்பற்றித் தவறாக எண்ணுவார்கள் என்றோ, பேசுகிறவருடைய நேரத்தை நான் வீணாக்குகிறேன் என்றோ நானாகக் கற்பனை செய்துகொள்கிறேன், அதனால், பல விஷயங்களைத் தெரிந்துகொள்கிற, அதன்மூலம் பல தலைப்புகளை ஆழமாகப் புரிந்துகொள்கிற வாய்ப்பை விட்டுவிடுகிறேன்.

இதைப்பற்றிப் பேசும்போது, பல ஆண்டுகளுக்குமுன்னால் ஓர் அலுவலகச் சுவரில் பார்த்த ஒரு சுவரொட்டிச் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது: I am intelligent, because I ask silly questions.

‘Silly Question’ என்பதற்குப் பலவிதமாகப் பொருள் சொல்லலாம்: அறிவற்ற கேள்வி, முட்டாள்கள் மட்டுமே கேட்கிற கேள்வி, அற்பமான கேள்வி, பொருட்படுத்தக்கூடாத கேள்வி, கேட்கக்கூடாத கேள்வி, நேரத்தை வீணாக்குகிற கேள்வி… நாம் எழுப்புகிற பல கேள்விகள் இந்த வரையறைக்குள் அமைந்துவிடுமோ என்கிற தயக்கம் நமக்கு இருக்கிறது.

ஆனால் உண்மையில், Silly Questions என்று இங்கு எதுவுமே இல்லை, தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்வதில் நமக்கிருக்கிற தயக்கம்தான் இதற்கெல்லாம் அடிப்படை. அப்படிப் போலி அறிவை முன்னிறுத்தி என்ன சாதித்துவிடப்போகிறோம்? அதற்குப்பதிலாக, ‘இதை விளக்கிச் சொல்லுங்களேன்’ என்று வாயைத் திறந்து கேட்டுவிடலாம், அறிவாளிகள் அப்படிதான் செய்வார்கள், அப்படிச் செய்ததால்தான் அவர்கள் அறிவாளிகளானார்கள்.

கேட்டால் எதிராளி சினம் கொள்வாரோ என்கிற தயக்கமும் பொருளற்றது. சிலர் சினம் கொள்ளலாம், முகம் சுளிக்கலாம், ‘இதுகூடத் தெரியாதா உனக்கு?’ என்றுகூடக் கேட்கலாம், ‘போய் இந்தப் புத்தகத்தைப் படி’ என்றோ, ‘கூகுள் செஞ்சு தெரிஞ்சுக்கோ’ என்றோ எரிந்து விழலாம். ஆனால், அதற்குத் தயங்கி யாரிடமும் எதையும் கேட்காமல் இருந்துவிடுவதால் நமக்கல்லவா அறிவிழப்பு?

நான் பார்த்தவரையில், விஷயம் அறிந்த அனைவருக்கும் அதைச் சொல்லித்தருகிற ஆர்வமும் இருக்கிறது. கேள்வி கேட்கிறவர்களை அவர்களுக்குப் பிடிக்கும், விளக்கம் சொல்லப் பிடிக்கும், அதன்மூலம் உலகுக்குத் தங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்கிறோம் என்ற மன மகிழ்ச்சியும் நிறைவும் அவர்களுக்கு உண்டாகிறது. சொல்லப்போனால், மனித குலத்தின் அறிவு பெருகியதே இப்படிக் கேள்விகளைக் கேட்பதன்மூலமும் பதில்களைச் சொல்வதன்மூலமும்தான்.

கேள்வி கேட்பதால் மிஞ்சிப்போனால் என்ன கெடுதல் வந்துவிடும்? எப்போதாவது ஒரு சினச்சொல், அவமானப்படுத்தும் முறைப்பு, கேலிச்சிரிப்பு வருமோ என்று தயங்குவதைவிட, கேட்டுவிடுவது சிறந்தது. பதில் கிடைத்தால் உள்ளே வாங்கிப் போட்டுக்கொள்ளலாம், இல்லாவிட்டால் வேறு வழிகளில் அதைப் பின்னர் தேடிக்கொள்ளலாம், இழப்பு ஏதுமில்லை.

உண்மையில், ஒரு கூட்டத்தில் நாம் இப்படித் தயங்கித் தயங்கிக் கேட்கிற ‘Silly Question’ அங்கிருந்த பலருடைய மனத்தில் இருக்கும், அவர்களும் நம்மைப்போல் தயங்கியிருப்பார்கள், நாம் முந்திக்கொண்டு கேட்டுவிடுவதால் எல்லாருக்கும் பலன் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், கேள்வி கேட்பதாலோ, நிறையக் கேள்வி கேட்பவராக இருப்பதாலோ எந்த அவமானமும் இல்லை, கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்காமல், ஒவ்வொருமுறையும் புதிய கேள்விகளைக் கேட்பது அறிவின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது, அறிவுக்குறைவை இல்லை. இந்த மனநிலை நமக்கு வந்துவிட்டால், நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரும், ஒவ்வோர் உரையாடலும் நம் அறிவைச் சிறிதேனும் பெருக்கிக்கொண்டுதான் இருப்பார்கள்.

மனிதர்களிடம் கேட்பதைப்போலவே, நூல்களிடமும் கேள்வி கேட்கலாம், அது ஒரு சுவையான வலைப்பின்னல் விளைவை உண்டாக்கும்.

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

Exit mobile version