Site icon என். சொக்கன்

1-3-5

அலுவலகத்திலும் சரி, தனிப்பட்ட வேலைகளிலும் சரி, “To Do List” எனப்படுகிற “செய்யவேண்டியவற்றின் பட்டியல்” கையிலிருப்பது நல்லது. அதில் ஒவ்வொரு வேலையாகச் செய்தபிறகு, மிதவாதிகள் அந்த வேலையின் அருகில் ஒரு டிக் போடுவார்கள், தீவிரவாதிகள் அதன்மீது ஆவேசத்துடன் சில, பல கோடுகளைக் கிழித்து மகிழ்வார்கள்.

To Do பட்டியலில் ஒரு வசதி, அதற்கு முற்றுப்புள்ளியே கிடையாது. மேலும் மேலும் விஷயங்களைச் சேர்க்கலாம், ராவணனுடைய அவையில் அனுமாருடைய வாலைப்போல் அது நம் விருப்பத்துக்கேற்ப நீண்டுகொண்டே போகும்.

ஆனால், இதுபோன்ற நீண்ட To Do பட்டியல்களால் பெரிய பயனில்லை என்கிறார்கள் சிலர். 1-3-5 என்ற நேர மேலாண்மை உத்தி, ‘ஒவ்வொரு நாளும் நம்மால் எட்டே எட்டு விஷயங்களைத்தான் செய்யமுடியும். அதற்குமேல் திட்டமிடுவது வேஸ்ட்’ என்கிறது.

அதாவது, நாள்தோறும் தூங்கி எழுந்தவுடன், இன்றைக்கு நான் செய்யப்போகும் மிக முக்கியமான வேலை இது என்று ஒரே ஒரு பெரிய வேலையைமட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டுமாம். அதன்பிறகு, போனால் போகிறது என்று 3 நடுத்தர விஷயங்கள், 5 சிறிய விஷயங்களை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம். அதற்குமேல் எதைச் சேர்த்தாலும் பிரச்னைதான், வேலையும் ஒழுங்காக நடக்காது, அழுத்தமும் குறையாது.

ஒருவேளை, என்றைக்காவது நான் எட்டு வேலைகளுக்குமேல் செய்யவேண்டியிருந்தால்?

ம்ஹூம், அந்தப் பேச்சே கூடாது. கைவசம் உள்ளவற்றுள் மிக முக்கியமான எட்டு வேலைகளைமட்டும் அன்றைக்கு எடுத்துக்கொள்ளுங்கள், மிச்சமெல்லாம் நாளைக்குதான்!

இந்த உத்தியைப்பற்றிப் படித்ததும், ‘அட, நல்லாயிருக்கே, இதைப் பயன்படுத்திப்பார்க்கலாமே’ என்று ஆசையாக இருந்தது. என்னுடைய இப்போதைய To Do பட்டியலில் 251ஆவதாக அதைச் சேர்த்திருக்கிறேன்.

Exit mobile version