Site icon என். சொக்கன்

எழுத்தாளர் சார்

நேற்று கலந்துகொண்ட குடும்ப விழாவில், நெருங்கிய நண்பர் ஒருவர் என்னை அணுகி, ‘என் பையன் உங்ககிட்ட ஏதோ பேசணுமாம்’ என்றார்.

‘அப்படியா? என்ன விஷயம்?’ என்றேன் சற்றுத் திகிலாகி.

‘அவனோட பள்ளிக்கூடத்துல எழுத்தாளர்களைப்பத்தி ஆஹோ, ஓஹோன்னு ரொம்பப் பெருமையாச் சொல்லியிருக்காங்கபோல. இவனும் அதிலேர்ந்து புத்தகம் எழுதணும்ன்னு ஆசையா இருக்கான். அதான் உங்ககிட்ட பேசினா நாலு விஷயம் தெரிஞ்சுக்குவான்.’

‘ஓ, நல்ல விஷயம்தான். பையன் என்ன படிக்கறான்?’

‘UKG!’

‘அட, இந்த வயசுல இப்படி ஓர் ஆர்வமா. கூட்டிக்கிட்டு வாங்க, பேசறேன்.’

சிறிது நேரத்தில் வேறு யாரோ அந்தச் சிறுவனை என்னிடம் அழைத்துவந்தார்கள். ‘டேய், சார்தான் ஆத்தர், புக்கெல்லாம் எழுதியிருக்கார்’ என்று அறிமுகப்படுத்தினார்கள்.

அவன் என்னை மேலும் கீழும் பார்த்தான். ஒரு சூப்பர் மேனை எதிர்பார்த்து வந்திருக்கிறான்போல. இந்தச் சுமார் மேனை அவன் மனம் எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளவில்லை, ‘நீங்க புக்ஸ் எழுதியிருக்கீங்களா?’ என்றான் ஐயத்துடன்.

‘ஆமா கண்ணா.’

‘நீங்களே எழுதுவீங்களா?’

‘ஆமா.’

‘ஒவ்வொரு வரியும் நீங்கதான் எழுதுவீங்களா?’

‘ஆமா.’

அவன் சற்று இடைவெளி விட்டு, ‘ஒரு நாள்ல ஒரு புத்தகம் எழுதுவீங்களா?’ என்றான்.

நான் திகைத்துப்போய், ‘இல்லை, இல்லை, ஒரு புத்தகம் எழுதறதுக்குப் பல வாரம், பல மாசம் ஆகும்’ என்றேன்.

அப்போது ஓடியவன்தான். அதன்பிறகு நாள்முழுக்க என் பக்கத்திலேயே வரவில்லை!

Exit mobile version