Site icon என். சொக்கன்

கேக்குதா

நேற்று நள்ளிரவு நெருங்கும் நேரம். எங்கள் அலுவலகப் பெருந்தலை ஒருவருடைய உரையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர் அலுவல் விஷயங்களை விளக்கமாகப் பேசியபிறகு, ‘உங்களுக்கெல்லாம் ஒரு போட்டி வைக்கிறேன்’ என்றார். ‘உங்களுக்குப் பிடித்த உணவைப் புகைப்படம் எடுத்து இந்தப் பக்கத்தில் வெளியிடுங்கள், சிறந்த புகைப்படத்துக்குப் பரிசு உண்டு.’

அடுத்த 15 விநாடிகளில் அவர் குறிப்பிட்ட பக்கத்தில் சுமார் ஐந்நூறு புகைப்படங்கள் வலையேறின. அவற்றில் ஐந்துக்கு மூன்று கேக்குகள், கேக்குகள், கேக்குகள்… எல்லா வண்ணத்திலும், எல்லா வடிவத்திலும். எல்லா அளவிலும், வெட்டப்பட்டவை, வெட்டப்படாதவை, கிரீம் கொண்டவை, கடினமானவை, மென்மையானவை, உலர்பழங்கள் எட்டிப்பார்க்கிறவை, பழத் துண்டங்களைக் கிரீடமாகச் சூடிக்கொண்டிருக்கிறவை, வெட்டாத முழுக் கேக்குகள், வெட்டிய துண்டுகள் என எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேக்குகள்தான் என்ன அழகு. டிஜிட்டல் என்றாலும் கையை நீட்டிப் பிடுங்கிச் சாப்பிட்டுவிடலாம்போல் ஆசை வருகிறது!

ஆனால் உண்மையில் எனக்கு அலங்காரமான கேக்குகள் பிடிக்காது. டீ கேக் எனப்படுகிற எளிமையான கேக்தான் ரொம்பப் பிடிக்கும். எங்கள் வீட்டருகில் ஒரு பேக்கரியில் ‘ரவா கேக்’ என ஒன்று கிடைக்கும், இதேபோல் வால்நட் கேக், வாழைப்பழக் கேக்… இவை எல்லாம் கிட்டத்தட்ட டீ கேக்கின் Bold வடிவங்களைப்போல்தான் இருக்கும்.

Image by Ben Frewin from Pixabay

சியாட்டில் சென்றிருந்தபோது அங்கு The Cheesecake Factory என்ற கடை மிகவும் புகழ்பெற்றது என்று அழைத்துச் சென்றார்கள். அங்கு சாப்பிட்ட சீஸ் கேக் சற்று புளிப்புச் சுவையுடன் மிக நன்றாக இருந்தது.

பெங்களூரிலும் சில இடங்களில் சீஸ் கேக் கிடைக்கிறது. ஆனால் ஆனை விலை சொல்கிறார்கள்.

இதை ஒருமுறை நங்கையிடம் சொல்லிப் புலம்பியபோது, ‘சியாட்டில்ல இதோட விலை என்ன?’ என்றாள்.

யோசித்தேன், துல்லியமாக நினைவு வரவில்லை, குத்துமதிப்பாக ஒரு தொகையைச் சொன்னேன்.

நங்கை மனத்துக்குள் ஒரு கணக்குப் போட்டுவிட்டு, ‘அப்பா, அதோட ஒப்பிட்டா நம்ம ஊர் சீஸ் கேக் விலை ரொம்பக் கம்மிதான்ப்பா’ என்றாள்.

‘உண்மைதான். ஆனா அந்த சீஸ் கேக்குக்கு என் கம்பெனி பணம் கொடுத்துச்சு. இங்க நான்ல்ல கொடுக்கணும்! அஸ்கு, புஸ்கு!’ என்றேன்.

Exit mobile version