Site icon என். சொக்கன்

அண்ணாந்து பார்த்தல்

2004ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள். ‘அண்ணாவைப்பற்றி நீ ஒரு புத்தகம் எழுதணும்’ என்றார் பா. ராகவன்.

‘எழுதலாமே’ என்றேன் ஆர்வத்துடன்.

‘ஆனா ஒரு நிபந்தனை, மொத்தம் 80 பக்கம்தான், அதுவும் சின்ன சைஸ் கையடக்கப் புத்தகம். அதுக்குள்ள அவரோட வாழ்க்கையை முழுக்கக் கொண்டுவரணும்.’

இதைக் கேட்டதும் எனக்கு வந்த ஆர்வம் காணாமல் போய்விட்டது. காரணம், சிறிய அளவில் 80 பக்கங்கள் என்றால் நான் வழக்கமாக எழுதுகிற அளவில் வெறும் 60 பக்கம்தான். அதற்குள் ஒருவருடைய முழு வாழ்க்கையை எப்படி எழுதுவது?

‘அதுதான் சவால், எழுது, உன்னால முடியும்’ என்றார் அவர்.

பாரா எப்போதும் அப்படிதான். தன்னால் முடியாதது எதுவும் இல்லை, மற்றவர்களால் முடியாததும் எதுவுமில்லை என்று நினைக்கிறவர், அதை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் பேசிப்பேசியே சம்மதிக்கவைத்துவிடுவார்.

ஆக, நான் அந்தப் புத்தகத்துக்கான பணிகளைத் தொடங்கினேன். அண்ணாவைப்பற்றிய ஒரு சிறு நூலுக்காகத் தகவல்களைத் திரட்டத்தொடங்கினேன்.

ஆனால், நான் நினைத்ததுபோலவே அந்தப் பணி மிகப் பெரிதாக நீண்டது. ஏகப்பட்ட தகவல்கள் கொட்டிக்கொண்டே இருந்தன, அவற்றைச் சும்மா அடுக்கிவைத்தாலே 80 பக்கம் தாண்டிவிடும் என்று பாராவிடம் புலம்பினேன். ‘அதெல்லாம் முடியாது, 80 பக்கம்தான் சைஸ், எழுது’ என்றார் அவர்.

பாராவின் பிடிவாதத்துக்குக் காரணம், அப்போது அவர் அண்ணா, காமராஜர், பெரியாரைப்பற்றி மூன்று சிறு நூல்களைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்தார். அந்த மூன்றில் ஒன்றுதான் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, நான் அந்த அளவில்தான் எழுதியாகவேண்டும், வேறு வழியில்லை.

எப்படியோ, அண்ணாவின் கதையைச் சுருக்கமாக எழுதினேன். அழகான அட்டைப்படத்துடன் 2004 ஜூன் மாதத்தில் அந்தப் புத்தகம் பிரசுரமானது. படிக்கவும் நன்றாக இருந்தது.

சில நாட்கள் கழித்து, பாரா என்னை அழைத்தார், ‘உன்னோட அண்ணா புக் நல்லாதான் இருக்கு. ஆனா ரொம்ப அவசரமா ஓடுது, ஒரு முழுமை இல்லை’ என்றார்.

எனக்குச் செம கடுப்பு, ‘சார், நீங்கதானே 80 பக்கத்துல முடிக்கச்சொன்னீங்க?’

‘ஆமா, நான்தான் சொன்னேன். அதனால என்ன? நான் கேவலமா எழுதுன்னு சொன்னா நீ அதேமாதிரி எழுதிடுவியா? உனக்குன்னு சுய புத்தி கிடையாதா?’ என்று சிரித்தபடி கேட்டார் அவர், ‘சரி, இருக்கட்டும், இப்ப நானே சொல்றேன், இந்தப் புத்தகத்தை விரிவாக்கி நல்லாப் பிரமாதமா எழுதிக்கொடு, அண்ணாவைப்பத்தின டெஃபனட் பயக்ரஃபின்னு எல்லாரும் சொல்றமாதிரி ஒரு புக் எனக்கு வேணும்.’

அண்ணாவைப்பற்றிய சிறு நூலுக்காகத் திரட்டிய தகவல்கள் அனைத்தும் என்னிடம் பத்திரமாக இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி விரிவான நூலொன்றை எழுதிக்கொடுத்தேன். 60லிருந்து 180 பக்கங்களுக்குத் தாவிய அந்தப் புத்தகமும் அதே 2004ல் வெளியாகி மிக நல்ல வரவேற்பைப் பெற்றது, 16 ஆண்டுகளுக்குப்பின் இப்போதும் நன்றாகவே விற்றுக்கொண்டிருக்கிறது.

எந்தப் புத்தகமும் அதற்குரிய அளவில் இருந்தால்தான் மதிப்பு என்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். விரிவாகச் சொல்லவேண்டியதைச் சுருக்கமாகச் சொன்னாலும் எடுபடாது, சுருக்கமாகச் சொல்லவேண்டியதை விரித்தாலும் எடுபடாது, வாசகர்கள் அறிவாளிகள்!

Exit mobile version