Site icon என். சொக்கன்

பாராட்டு

எங்கள் அலுவலகத்தில் புதிய யோசனைகளுக்கு எப்போதும் மதிப்புண்டு. அதே நேரம் அவற்றை வெறுமனே ஒரு வரி, இரண்டு வரியில் சொன்னால் போதாது, நன்கு அலசி, ஆராய்ந்து, உரிய தரவுகளுடன் சமர்ப்பித்தால், அந்த யோசனைகள் திட்டங்களாகும், தீர்வுகளாகும், நாளை அவை கோடிக்கணக்கானோரைச் சென்று சேரும் வாய்ப்புண்டு.

அப்படிச் சில மாதங்களுக்குமுன்னால் நானும் என் குழுவினரும் ஒரு யோசனையைக் கண்டறிந்தோம். அதுபற்றிய ஆவணமொன்றை நான் எழுதத் தொடங்கினேன்.

ஆனால், அந்த ஆவணத்தை முழுமையாக நிறைவு செய்வதற்குள், நான் இன்னொரு குழுவுக்கு மாறிவிட்டேன். ஆகவே, நான் எழுதிய முதல் வரைவை (First Draft) வேறொரு பொறியாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினேன்.

அந்த இளம் பொறியாளர் மிகச் சிறந்த திறமைசாலி. நான் எழுதியதைப் பலமடங்கு மேம்படுத்திச் சிறப்பாக்கி இன்னும் பலரிடம் கருத்துகளைப் பெற்று மெருகேற்றினார். நானும் என்னுடைய புதிய குழுவில் இருந்தபடி அவருக்குச் சில ஆலோசனைகளைத் தந்தேன்.

இன்று, அந்த ஆவணம் ஓர் உயர்நிலை அலுவலரிடம் வழங்கப்பட்டது. அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. முழுக்கப் படித்துவிட்டு அதை மனம் திறந்து பாராட்டியவர், ‘இதை யாரெல்லாம் எழுதினார்கள்?’ என்று கேட்டார். அங்கிருந்த மேலாளர் அந்தப் பொறியாளருடைய பெயரைச் சொன்னார்.

Image by Alexas_Fotos from Pixabay

நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அலுவல்ரீதியாக இல்லை, தனிப்பட்ட ஆர்வத்தால் கலந்துகொண்டேன். ஆகவே, ‘யாரெல்லாம் எழுதினார்கள்?’ என்று அவர் பன்மையில் கேட்டபோது, என்னுடைய பெயரும் குறிப்பிடப்படும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை, அதை எதிர்பார்த்து நான் அங்கு செல்லவில்லை என்றாலும், இதனால் எனக்கு ஏமாற்றமில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை.

உண்மையில், அந்த யோசனை என்னுடையதில்லை, அந்த ஆவணத்தில் என்னுடைய பங்கும் மிகச் சிறியது. ஆகவே, அங்கு என்னுடைய பெயர் குறிப்பிடப்படவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால், எதிலும் தன்னுடைய பங்களிப்பைச் சற்றுப் பெரிதாகவும் பிறருடைய பங்களிப்பைச் சற்றுச் சிறிதாகவும் பார்ப்பதுதானே சராசரி மனத்தின் இயல்பு?

ஆகவே, அந்தக் கூட்டம் நிறைவடைந்ததும், நண்பர் ஒருவருடைய வாட்ஸாப்பில் இந்தப் புலம்பல்களையெல்லாம் அப்படியே கொட்டினேன். ஓரளவு மன நிறைவாக இருந்தது. வேறு வேலைக்குத் திரும்பிவிட்டேன்.

அதன்பிறகு இதைப்பற்றி நிதானமாக யோசித்தபோது, என்னுடைய வருத்தம் எவ்வளவு அபத்தமானது என்று புரிந்தது. என்னுடைய புதிய குழுவில் சில மிக நல்ல திட்டங்களில் நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன், இங்கு என்னுடைய மேலாளர்கள் இருவரும் என்மீது மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் வைத்துள்ளார்கள், பல சவாலான தொழில்நுட்பப் பிரச்னைகளைச் சுவையானமுறையில் தீர்த்துக்கொண்டிருக்கிறோம், அதனால் பல புதிய வாய்ப்புகள் திறந்துகொண்டிருக்கின்றன, இதையெல்லாம் நினைத்து மகிழாமல் ஆறு மாதத்துக்குமுன் செய்த வேலைக்குப் பாராட்டு வரவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பதில் பொருளுண்டா? நல்ல யோசனை யாருடைய பெயரில் செயலுக்கு வந்தால் என்ன?

இப்போது, அந்த இளம் பொறியாளரை வாட்ஸாப்பில் பிடித்தேன்: ‘உங்கள் ஆவணம் அடுத்த நிலைக்கு முன்னேறியதற்கு வாழ்த்துகள். இதே முனைப்புடன் பணியாற்றுங்கள். இதுதொடர்பாக எந்த உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளுங்கள், தொடர்ந்து பேசுவோம்.’

Exit mobile version