Site icon என். சொக்கன்

But, Sir…

இன்று அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர், இன்னாள் மேலாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் (அமெரிக்க) ராணுவத்தில் பணியாற்றிய அனுபவங்களைப்பற்றிச் சுவையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் ஒன்று, ‘But, Sir’ விதிமுறை.

அதாவது, ராணுவத்தில் எல்லாரும் எப்போதும் மேலதிகாரிகளுடைய பேச்சைக் கேட்கவேண்டும், மறுத்துப் பேசக்கூடாது.

ஒருவேளை மறுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், காரணத்தைச் சொல்லி மூன்று முறை மறுக்கலாம். அதன்பிறகும் மேலதிகாரி மனம் மாறாவிட்டால் அவர் சொன்னதைச் செய்யத்தான் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். அப்போது, அவருடைய மேலதிகாரி அங்கு வந்து, ‘இந்த அறையைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்து’ என்கிறார்.

‘But, Sir, நான் வேறு வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன்.’ (முதல் மறுப்பு)

‘பரவாயில்லை, இந்த அறையைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்து.’

‘But, Sir, இந்த அறையைப் பெருக்குவது என்னுடைய வேலை இல்லை.’ (இரண்டாவது மறுப்பு)

‘பரவாயில்லை, இந்த அறையைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்து.’

‘But, Sir, இந்த அறை ஏற்கெனவே தூய்மையாகதான் இருக்கிறது, அவ்வளவாகக் குப்பை ஏதும் இல்லை.’ (மூன்றாவது மறுப்பு)

‘பரவாயில்லை, இந்த அறையைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்து.’

அவ்வளவுதான். மூன்று ‘But, Sir’கள் தீர்ந்துவிட்டதால் இனி அந்த நபர் மறுப்பு எதுவும் சொல்லக்கூடாது, துடைப்பத்தைக் கையில் எடுக்கத்தான் வேண்டும்.

இதை அவர் விளக்கியதும், ‘But, Sir, இது கொஞ்சம் அடிமைத்தனமாக இருக்கிறது’ என்றேன்.

‘பரவாயில்லை, பின்பற்றத்தான் வேண்டும்’ என்றார் அவர்.

Exit mobile version