Site icon என். சொக்கன்

தூய்மை எண்ணங்கள்

நான் அவ்வப்போது… ம்ஹூம், மாதம் ஒருமுறை… ம்ஹூம், சில மாதங்களுக்கு ஒருமுறை… ம்ஹூம், பல மாதங்களுக்கு ஒருமுறை நினைத்துக்கொண்டாற்போல் என் எழுத்து மேசையைத் தூய்மைப்படுத்துவதுண்டு. மற்ற நேரங்களில் அது தூசு படிந்து இருக்கும். ‘எண்ணங்கள் தூய்மையாக உள்ள இடத்தில் புற அழுக்கு ஒரு பொருட்டா?’ என்று சொல்லி நான் அதை அலட்சியப்படுத்திவிடுவேன்.

என் மனைவி வீட்டில் எல்லா இடங்களையும் வாரத்துக்குச் சிலமுறை தூய்மைப்படுத்துகிறவர். ஆனால் என் மேசைக்குப் பக்கத்தில் வரமாட்டார். அங்கு ஒரு சிறு தாளை அரை மில்லிமீட்டர் நகர்த்திவைத்தாலும் நான் கண்டுபிடித்துக் கத்துவேன் என்பது அவருக்குத் தெரியும். அதனால், உன் அழுக்கு, உன் பிரச்சனை என்று விட்டுவிடுவார். நானும் அதைப் பொருட்படுத்தாமல் ஓர் அடுக்கு அழுக்குக்கு நடுவில் என் ஆட்சியை நடத்துவேன்.

இத்தனைக்கும் எனக்குத் தூசு ஒவ்வாமை (டஸ்ட் அலர்ஜி) உண்டு. ஆண்டுமுழுக்கத் தும்மிக்கொண்டிருக்கிறவன். ஆனால், நாள்தோறும் குறைந்தது பத்து மணி நேரம் புழங்குகிற மேசையைத் தூய்மைப்படுத்தச் சோம்பல். பிறர் அதைச் செய்தாலும் எனக்குச் சரிப்படாது. நான் எதை எங்கு வைத்தேனோ அது அங்கு இருந்தால்தான் என் உலகம் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு வரும்.

Image by Donate PayPal Me from Pixabay

எப்போதாவது நான் அந்த மேசையைத் தூய்மைப்படுத்துகிற நாட்களில், ‘இனிமே ஒழுங்கா வாரத்துக்கு ஒருநாள் இதை Clean பண்ணிட்டுதான் எழுத உட்காரணும்’ என்றோ, ‘க்ளீன்லினெஸ் ஈஸ் காட்லினெஸ்’ என்றோ, ‘திங்கட்கிழமை காலையில் மேசைத் தூய்மைக்கு அரை மணி நேரம் ஒதுக்கினால் என்ன?’ என்றோ பலவிதமாக எண்ணிக்கொள்வேன். ஆனால், அடுத்த பல வாரங்களுக்கு அதைத் திரும்ப நினையேன்.

என்னுடைய இன்னொரு பிரச்சனை, தூய்மைப்படுத்தும்போது அதைமட்டும் செய்யமாட்டேன். அங்குள்ள அழுக்கைப்பற்றி ஏதேதோ நினைத்துக்கொள்வேன். எடுத்துக்காட்டாக, இன்றைய மேசைத் தூய்மைப்படுத்தலில் வேர்க்கடலைத் தோலின் சதவிகிதம் என்னவாக இருக்கும்? வேர்க்கடலைக்கு வெளியில் ஒரு கடினத் தோல் இருக்கும்போது உள்ளே ஒரு மென்மைத் தோல் எதற்கு? அது ஏன் தொட்டவுடன் உதிராமல் ஒரு குறிப்பிட்ட அளவு விசையை ஏற்றுதான் உதிர்கிறது? அந்தத் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன நன்மை? என்ன தீமை?… இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் எப்போது அடுத்த அழுக்கைத் துடைப்பது?

செயற்கை அறிவாளர்கள் ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள், மேசைமேல் நாமாக வைத்த பொருட்களைத்தவிர மற்றவையெல்லாம் சில மணிநேரத்துக்கு ஒருமுறை தானாக நீக்கப்பட்டுத் தூய்மையாவதுபோல் ஒரு க்ளீன்ஜிபிடி கண்டுபிடித்தால் என்ன?

***

தொடர்புடைய கட்டுரை: எழுதுமிடம்

Exit mobile version