Site icon என். சொக்கன்

கமென்ட் அடித்தல்

எழுத்தைக் கூர்மையாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் நாள்தோறும் எழுதிப் பயிற்சியெடுக்கவேண்டும் என்பார்கள். ஒரு நாளைக்கு இத்தனைச் சொற்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டு எழுதுவது இன்னும் நல்லது. அது பதிப்பிக்கும் தரத்தில் உள்ளதா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம், தொடர்ந்து எழுதுகிற பழக்கத்தை உண்டாக்கிக்கொள்வதுதான் இங்கு முதல் நோக்கம். அந்தப் பழக்கம் வந்துவிட்டால், நம்முடைய தர அளவுகோல் தானாக மேம்படும், அதன்மூலம், நாம் எழுதும் விஷயங்கள் இன்னும் செழுமையாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.

ஆனால், நாள்தோறும் எதை எழுதுவது? எழுதுவதற்கு விஷயம் இருக்கவேண்டுமில்லையா?

இன்றைய சமூக ஊடகக் காலத்தில் இது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. ஃபேஸ்புக், ட்விட்டரிலேயே பல உருப்படியான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்து லைக் போடுவதோடு கடந்து சென்றுவிடாமல், நமக்குப் பிடித்த ஒவ்வொன்றைப்பற்றியும் நாலு வரி பதில் (கமென்ட்) எழுதுவது என்று வைத்துக்கொண்டாலே ஒரு நாளைக்குச் சுமார் ஐந்நூறு சொற்களை எளிதாக எழுதிவிடலாம்.

கமென்ட் எழுதுவதெல்லாம் ஓர் எழுத்துப் பயிற்சியா என்று முகம் சுளிக்கவேண்டியதில்லை. சமூக ஊடகங்களில் பெரும்பாலானோர் (90%க்குமேல்) வெறுமனே படிக்கிறவர்கள், ஒரே ஓர் எழுத்தைக்கூட எழுதாதவர்கள், ஏன் என்று யோசித்தால், சொல்வதற்கு ஏதுமில்லை, அல்லது, நாம் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள் என்ற தயக்கம், அல்லது, சோம்பேறித்தனம், அல்லது, படிக்கிறவர்கள் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம்… இப்படிக் காரணம் எதுவானாலும் சரி, இதிலிருந்து வெளியேற விரும்புகிறவர்கள் கமென்ட் பெட்டியைக்கூட ஓர் ஆயுதமாக/உத்தியாகப் பயன்படுத்தலாம். தொடக்கத்தில், ‘நல்ல பதிவு, நன்றி நண்பரே’ என்ற ரேஞ்சுக்குதான் எழுதவரும், ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முன்னேறி ஒரு பொருளுள்ள கருத்தைச் சொல்லத்தொடங்குவோம், அவற்றுக்கு வரும் லைக்குகள் இன்னும் ஊக்கம் தரும். பின்னர் அந்தக் கமென்ட்களையே கொஞ்சம் ஒழுங்குபடுத்தித் தனிப் பதிவாக்கும் துணிவு வரும். அங்கிருந்து, புதிய பதிவுகளை எழுதும் நிலைக்கு முன்னேறலாம், எழுத்துப் பழக்கத்தை உண்டாக்கிக்கொண்டுவிடலாம்.

இதற்கு அச்சு ஊடகங்களில் எடுத்துக்காட்டுகள் உண்டு. வாசகர் கடிதம் எழுதுவதில் தொடங்கிப் பின்னர் எழுத்தாளராக, நூலாசிரியராக ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள். எங்கு தொடங்குகிறோம் என்பதில் எந்த இழிவும் இல்லை, அங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பதுதான் முக்கியம்.

Exit mobile version