Site icon என். சொக்கன்

வயது குறைவான மனிதர்

அகரமுதலி என்பது, சொற்களுக்கான விளக்கத்தை அளிப்பது. எடுத்துக்காட்டாக, ‘காடு’ என்று தேடினால், ‘மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி’ என்பதுபோன்ற ஒரு விளக்கம் அதில் தரப்பட்டிருக்கும். இப்படிப் பல்லாயிரம் சொற்கள், பல்லாயிரம் விளக்கங்களை அகரவரிசைப்படி தொகுத்துத் தந்திருப்பார்கள்.

இதனால், ஒரு மொழியைப் புதிதாகப் பயிலும்போது அகரமுதலி மிகவும் பயன்படும். அந்த மொழியில் அமைந்த கதைகள், கட்டுரைகளை வாசிக்கையில் புரியாத சொற்களைச் சட்டென்று அகரமுதலியில் தேடலாம், பொருள் தெரிந்துகொள்ளலாம்.

சில மாதங்கள் (அல்லது ஆண்டுகள்) கழித்து, நீங்களே அந்த மொழியில் எழுதத் தொடங்குகிறீர்கள். அப்போது, உங்களுக்கு ஓர் எதிர்-அகரமுதலி தேவைப்படும். அதாவது, இப்போது நீங்கள் ‘மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி’ என்பதை விவரிக்க எண்ணுவீர்கள், அதற்குக் ‘காடு’ என்று ஒரு சொல் உள்ளது என்பதை யாராவது உங்களுக்குச் சொன்னால் வசதியாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ‘அவர்கள் வசிக்கின்ற, சுற்றிலும் நான்கு சுவர்கள், மேலே கூரை கொண்ட இடத்தில் வயது குறைவான, இன்னும் நடக்கப் பழகாத, தவழ்ந்து செல்கின்ற ஒரு மனிதர் இருந்தார்’ என்று யாராவது எழுதினால் அது எத்தனைச் செயற்கையாக இருக்கும்! இதை எழுதியவர் தமிழுக்குப் புதியவர், அதிகம் படித்து, எழுதிப் பயிற்சி எடுக்காதவர், அவரிடம் ஓர் எதிர்-அகரமுதலி இருந்தால், அதைப் பயன்படுத்தி வீடு, குழந்தை என்ற சொற்களைக் கற்றுக்கொண்டிருப்பார், ‘அவர்களுடைய கூரை வீட்டில் ஒரு குழந்தை இருந்தது’ என்று எழுதியிருப்பார்.

ஆங்கிலத்தில் இந்த எதிர்-அகரமுதலியை “One Word Substitutions” (ஒற்றைச் சொல் மாற்றிகள்) என்கிறார்கள். அவ்வகையில் பல இணையத்தளங்கள், சில நூல்கள்கூட உள்ளன. இவற்றில் “a form of government where one person has all power” என்பதுபோல் தேடி “autocracy” என்பதுபோன்ற சொற்களைக் கண்டறியலாம், இவற்றைப் பயன்படுத்தி நம்முடைய மொழியை இன்னும் கூர்மையாக்கலாம், சரியான சொற்களைப் பயன்படுத்தித் தாக்கத்தை மிகுதியாக்கலாம்.

அகரமுதலியுடன் ஒப்பிடும்போது, இந்த எதிர்-அகரமுதலிகளில் தேடுவது சற்றுக் கடினம்தான். ஆனால், இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கணினிகள், செல்பேசிகளில் இதை நன்கு எளிமையாக்கலாம். ஏற்கெனவே கூகுளில் இதுபோன்ற விடைகளை அவ்வப்போது பார்த்துள்ளேன். எடுத்துக்காட்டாக, “one person has all power” என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.

தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை. ஆனால், தொழில்நுட்பரீதியில் பார்க்கும்போது, அகரமுதலியின் டிஜிட்டல் தரவுத்தளம் (database) நம்மிடம் இருந்தால் அதைத் திருப்பிப்போட்டு “ஒற்றைச் சொல் மாற்றி”களை உருவாக்குவது அப்படியொன்றும் கடினமாக இருக்காது என்று தோன்றுகிறது. தமிழ் மின் ஆர்வலர்கள் முயலலாம். இப்படிப்பட்ட தேடல்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியவகையில் அமைந்தால், எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், அவர்களுடைய சொல்வளம் மேம்படும்.

சொல்லப்போனால், எழுத்தாளர்களைவிட இது வாசகர்களுக்குதான் வசதி. வளவளவென்று நீட்டி முழக்காமல் சரியான, பொருத்தமான ஒரே சொல்லில் எல்லாரும் எழுதத் தொடங்கினால் நமக்குதானே நேரம் மிச்சம்!

Exit mobile version