Site icon என். சொக்கன்

டிஜிட்டல் ஆட்டோகிராஃப்

முன்பெல்லாம் புத்தக வெளியீட்டு விழாக்களில் நூலாசிரியருடைய கையொப்பத்துடன் புத்தகத்தைப் பெறுவதற்கு வாசகர்கள் வரிசையில் நிற்பார்கள். அவருடைய கையொப்பத்தைக் கொண்ட புத்தகத்தை ஒரு பொக்கிஷம்போல் பாதுகாப்பார்கள்.

இன்றைக்குப் பல நூல்கள் கிண்டிலில் நேரடியாக வெளியாகின்றன. ஒரே நொடியில் ஆயிரக்கணக்கானோர் அவற்றை வாங்கிப் படிக்கலாம், ஆனால், ஆசிரியருடைய ஆட்டோகிராஃப் கிடைக்காது.

தொழில்நுட்பம் எத்தனையோ பிரச்னைகளைத் தீர்க்கிறது. இதற்கும் ஒரு தீர்வு காண இயலாதா என்ன? எனக்குத் தோன்றிய யோசனைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

முதல் வழி, எல்லாக் கிண்டில் மின்னூல்களிலும் முதல் பக்கத்தில் ஆசிரியருடைய ஆட்டோகிராஃபை ஸ்கான் செய்து இணைத்துவிடலாம் (பல அச்சு நூல்களில்கூட இந்த ஏற்பாட்டைப் பார்த்திருக்கிறேன்.)

Image by Gerd Altmann from Pixabay

மிக எளிமையான இந்த வழியில் ஒரே பிரச்னை, எல்லாருடைய நூல்களிலும் ஒரே கையெழுத்தும் ஒரே வாசகமும்தான் இருக்கும். ‘அன்புள்ள கோயிஞ்சாமிக்கு நல்வாழ்த்துகள்’ என்று வாசகருடைய பெயரைக் குறிப்பிட்டுக் கையெழுத்திட வாய்ப்பில்லை.

அமேசான், கூகுள் போன்ற மின்னூல் பதிப்புத் தளங்கள் நினைத்தால் இதற்கும் வழி செய்யலாம், ஒவ்வொரு மின்னூலின் முதல் பக்கத்திலும் ஆட்டோகிராஃபுக்கு மேலாக, “அன்புள்ள _” என்ற சொற்களைச் சேர்த்துக் கோடிட்ட இடத்தில் அந்த நூலை வாங்கியவருடைய பெயரை நிரப்பிவிடலாம்.

இரண்டாவது வழி, நூலாசிரியர் தன்னுடைய சொந்தத் தளத்தில் “ஆட்டோகிராஃப்” பக்கமொன்றை உருவாக்கலாம். வாசகர்கள் அங்கு வந்து தங்களுடைய பெயரைக் குறிப்பிட்டால் போதும், அடுத்த விநாடி அவர்களுடைய பெயருடன் ஓர் ஆட்டோகிராஃப் பக்கத்தை PDFஆக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ம்ஹூம், அதெல்லாம் சரிப்படாது, எனக்கு ஆசிரியரே கைப்பட எழுதிய ஆட்டோகிராஃப்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிற பெட்ரோமாக்ஸ் விளக்குப் பிரியர்களுக்கு மூன்றாவதாக ஒரு வழியும் உண்டு: அதே ஆசிரியர் தளத்தில் உங்கள் பெயரைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தவேண்டும், எந்தப் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் வேண்டும் என்றும் குறிப்பிடவேண்டும்.

உடனே, ஆசிரியர் உங்களுக்கென்று ஓர் ஆட்டோகிராஃப் எழுதுவார், அவருடைய குழுவினர் அதை ஸ்கான் செய்து, அந்தப் புத்தகத்தில் சேர்த்து அமேசானில் வலையேற்றுவார்கள், அந்தத் ‘தனித்துவமான’ புத்தகத்தின் இணைப்பு உங்களுக்கு வரும், நீங்கள் அமேசானுக்குச் சென்று அதை வாங்கிக்கொள்ளலாம், சில நாட்களுக்குப்பிறகு, அந்தப் புத்தகம் அழிக்கப்பட்டுவிடும்.

இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன், ஒவ்வோர் ஆசிரியருடைய ஒவ்வோர் எழுத்தும் அவருடைய கையொப்பத்தைப் போன்றதுதான், அவர்களுடைய புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தாலே போதும், அவர்களைப் பெரிதும் மதிப்பதாகிவிடும்.

Exit mobile version