Site icon என். சொக்கன்

தோட்டுக்கடை ஓரத்தில்

நங்கையுடன் ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். தோடு, சங்கிலி, மோதிரம் போன்ற அணிகலன்களை விற்கிற சிறிய கடை அது. ஒருபக்கம் நங்கை பொருட்களைத் தேட, இந்தப்பக்கம் நான் ஃபேஸ்புக் மேய்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது அங்கு ஒரு பெண் வந்தார், தன்னுடைய செல்ஃபோனிலிருந்த ஒரு படத்தைக் கடைக்காரரிடம் காண்பித்து, ‘இந்தத் தோடு இருக்கா?’ என்று கேட்டார்.

‘ம்ஹூம், இல்லை’ என்று உதட்டைப் பிதுக்கினார் கடைக்காரர். ‘ஆனா, இதேமாதிரி வேற மாடல்ஸ் இருக்கு, காமிக்கட்டுமா?’

‘வேணாம்’ என்று உறுதியான குரலில் சொன்னார் அந்தப் பெண், வந்த வேகத்தில் வெளியேறி நடந்தார்.

அந்தக் கடையில் சின்னச் சின்னதாகச் சுமார் 10,000 பொருட்கள் இருக்கலாம், மேசைக்குக்கீழுள்ள பெட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இன்னொரு 10,000 பொருட்கள். இந்த 20,000 பொருட்களில் தோடுகள் 10% என்று வைத்துக்கொண்டால் அங்கு 2,000 தோடுகள் இருக்கலாம், அவை சுமார் 200 அல்லது 300 மாதிரிகளில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

அந்தப் பெண்ணின் செல்ஃபோனில் உள்ள தோடு அவர் எங்கோ இணையத்தில் பார்த்தது, அல்லது பேருந்தில் அவருடைய பக்கத்து இருக்கைப் பெண் அணிந்திருந்தது என்று வைத்துக்கொண்டால், அது இவ்வுலகில் உள்ள லட்சக்கணக்கான தோட்டு வடிவமைப்புகளில் ஏதோ ஒன்று. Perfectly Random Design. அந்தத் தோட்டின் வடிவமைப்பு இந்த 200 அல்லது 300ல் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு மிக மிகச் சிறியதுதான்.

ஆனால், அந்தப் பெண் இவற்றையெல்லாம் யோசித்ததுபோல் தெரியவில்லை, சரவணபவனுக்குச் சென்று ஃபில்டர் காஃபி கேட்கிறாற்போன்ற உறுதியுடன் அந்தத் தோட்டை வேண்டினார், அதேபோல் வேறொன்று இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டபோதும் அவர் கவனம் சிதறவில்லை, பெட்ரோமாக்ஸ் விளக்குதான் வேண்டும் என்ற தோரணையில் அதை மறுத்துவிட்டுப் பக்கத்துக் கடைக்குச் சென்றுவிட்டார். அநேகமாக அடுத்த ஆறாவது அல்லது எட்டாவது கடையில் அவர் நாடிய தோடு கிடைத்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

பெண்கள் (சில ஆண்களும்) தங்களை அழகுபடுத்திக்கொள்ள முனைவது ஏன் என்று எனக்கு ஒருபோதும் புரியப்போவதில்லை. ஆனால், நிகழ்தகவு எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு நல்லது நடக்கும் என்கிற அந்தப் பெண்ணின் சற்றுக் கிறுக்குத்தனமான தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் எனக்கு வேண்டும்.

Exit mobile version