Site icon என். சொக்கன்

உரிமையாளர்மட்டும்

இன்று நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்கென நகருக்கு வெளியிலிருக்கும் பிரமாண்ட அடுக்ககம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். சுமார் ஐந்நூறு வீடுகளைக் கொண்ட சிறு ஊர் அது. சுற்றி இரண்டு கிலோமீட்டர் வட்டத்துக்கு வெற்று நிலம்தான், அக்கம்பக்கத்தில் எந்த வசதிகளும் கிடையாது. ஆனால், அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் அந்த வளாகத்துக்குள்ளாகவே கிடைத்துவிடுகின்றன.

நான் வசிப்பதும் அடுக்ககம்தான். ஆனால் இங்கு மொத்தமே 8 வீடுகள்தான் என்பதால் இதுபோன்ற சிற்றூர் அடுக்ககங்களின் சூழல் எனக்குப் புதிது. அதனால், அங்கிருந்த ஒவ்வொன்றையும் சிறு வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன்.

அங்கு ஒவ்வொரு கட்டடத்துக்கும் இரண்டு லிஃப்ட்கள் (மின் உயர்த்திகள்) வைத்துள்ளார்கள். ஒன்றில் “வீட்டு உரிமையாளர்கள்/வசிப்போருக்குமட்டும்” என்று எழுதியுள்ளார்கள். இன்னொன்றில் “வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், விற்பனையாளர்களுக்குமட்டும்” என்று எழுதியுள்ளார்கள். நான் வேண்டுமென்றே முதல் லிஃப்டில் ஏறி இரண்டாவது லிஃப்டில் இறங்கிப் பார்த்தேன். இரண்டும் ஒரேமாதிரிதான் இருக்கின்றன, ஒரேமாதிரிதான் இயங்குகின்றன. அப்படியானால், பிரித்துவைப்பதற்குச் “சமூகக் காரணம்”தான் இருக்கவேண்டும்.

Image by Eak K. from Pixabay

அதாவது, இத்தனைப் பெரிய அடுக்ககத்தில் வசிப்போர் வேலைக்காரர்களுடன் ஒரே லிஃப்டில் செல்லத் தயங்குகிறார்கள்போல. அல்லது, அப்படி அவர்கள் தயங்கக்கூடும் என்று அந்தக் கட்டடத்தைக் கட்டிய நிறுவனம் நினைக்கிறதுபோல.

என்னைக் கேட்டால் இது தேவையில்லாத, பழைமையான, சொல்லப்போனால் சிறிதும் மனிதத்தன்மையில்லாத ஏற்பாடு என்பேன். பொத்தானை அழுத்தினால் யார் வேண்டுமானாலும் வேண்டிய தளத்துக்குச் செல்லலாம், இதில் என்ன உரிமையாளர், பணியாளர் வேறுபாடு என்று எனக்குப் புரியவில்லை. சொல்லப்போனால், இதன்மூலம் மின்சாரம் வீணாகும் என்பதுதான் எதார்த்தம்.

ஆனால், இதையும் நியாயப்படுத்துகிற சிலர் இருக்கக்கூடும்.

Exit mobile version