Site icon என். சொக்கன்

இனிது!

இன்று எங்கள் அலுவலகத்தின் மதிய உணவு மேசையில் கராச்சி அல்வா வைத்திருந்தார்கள்.

கராச்சி அல்வா என்பது பல வண்ணங்களில் கிடைப்பது, ஒளி ஊடுருவக்கூடிய வகையைச் சார்ந்தது. அதற்குள்ளிருக்கும் முந்திரிப் பருப்புகளெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும்போது நன்றாகத் தெரியவேண்டும், மிகவும் கெட்டியாகிவிடாமல், விரலில் எடுத்தால் நெகிழ்ந்து ஓடவேண்டும், ஆனால், நாமாகக் கடித்தாலன்றி உடையக்கூடாது. அப்படி ஒரு பதம் அமைந்தால் அல்வா பிரமாதமாக இருக்கும்.

நாங்கள் மூவர் ஒரு மேசையில் அமர்ந்திருந்தோம். ஆனால், இருவருடைய தட்டில்தான் அல்வா இருந்தது.

அந்த மூன்றாம் நபரும் இனிப்புப் பிரியர்தான். ஆனால், இனிப்பு சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அவரைக் கண்டித்திருக்கிறார்கள். அதனால், அவர் உணவு மேசையில் அல்வாவைப் பார்த்தும் பாராமலும் கடந்துவந்திருந்தார்.

ஆனால், அதன்பிறகுதான் அவருடைய உண்மையான சோதனை தொடங்கியது. எங்கள் இருவருடைய தட்டிலும் இருந்த அல்வாவை ஆசையாகப் பார்த்தபடி சாப்பிட்டார். விரைந்தோடிப் போய் ஒரு துண்டு அல்வாவை எடுத்துவந்துவிடலாமா என்று அவருடைய கண்களும் கைகளும் கால்களும் நாக்கும் பரபரப்பது எங்களுக்குத் தெரிந்தது.

என்னருகில் அமர்ந்திருந்தவர் குறும்புக்காரர், ‘என்ன, அல்வா வேணுமா?’ என்றார்.

‘சேச்சே, வேணாம்’ என்றார் அவர்.

‘பரவாயில்லை, நான் பாதி சாப்பிடறேன், நீ பாதி சாப்பிடு’ என்று நீட்டினார் இவர்.

‘வேணவே வேணாம்’ என்று மறுத்துவிட்டு அவர் வெங்காய ஊத்தப்பத்தில் கவனத்தைத் திருப்பினார். இவரும் சப்பாத்தியைச் சாப்பிடத்தொடங்கினார்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, இவருடைய தட்டு காலியாகிவிட்டது. ஓரமாகச் செஞ்செவ்வக வடிவில் அல்வாமட்டும்தான் மீதியிருந்தது. இவர் அதை ஸ்பூனால் நறுக்கப்போனார்.

இப்போது அவர் வாயைத் திறந்தார், ‘இதோ பாரு, அல்வா சாப்பிடு, ஆனா, அது நல்லா இருக்குன்னு முகத்துல உணர்ச்சியைக் காட்டாதே. புரிஞ்சதா?’

இவர் சற்று யோசித்தார். ‘நல்லா இருந்தாலும் முகத்தை உர்ருன்னு வெச்சுக்கணுமா?’ என்றார். பிறகு, ஸ்பூனால் அதை மெல்ல வெட்டினார், ‘பொதுவா இந்த அல்வாவை ஸ்பூனால வெட்டறது கஷ்டம், இவன் நல்லாப் பண்ணியிருக்கான், சுவையாத்தான் இருக்கும்ன்னு நினைக்கறேன்.’

‘அது எவ்ளோ சுவையா இருந்தாலும் பரவாயில்லை. அதை முகத்துல காட்டாம சாப்பிடு. அவ்ளோதான்.’

‘சரி’ என்று இவர் ஒரு துண்டு அல்வாவை வாயில் போட்டு மென்றார். பிறகு, இன்னொரு துண்டு சாப்பிட்டார். ஆனால், புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ஒருவரைப்போல் முகத்தில் துளி உணர்ச்சி இல்லை.

அவரோ இவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அதில் எதுவும் வெளிப்படவில்லை என்பதும் ஏமாந்துபோனார். ‘என்ன? அல்வா நல்லா இருக்கா?’ என்றார்.

பேசாமல் இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஏன் சார், நல்லா இருந்தாலும் முகத்துல உணர்ச்சியைக் காட்டக்கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப நீங்களே அவர்கிட்ட நல்லா இருக்கான்னு கேட்கறது என்ன நியாயம்?’ என்றேன்.

அவர் பெருமூச்சுடன், ‘நல்லாத்தான் இருக்கும்’ என்றார். ‘அவன் வெட்டின பதத்திலயே எனக்குப் புரிஞ்சுபோச்சு.’

சில விநாடிகளுக்குப்பிறகு அவர் எங்கோ பார்த்தபடி மீண்டும் பேசினார், ‘பெங்களூர்ல அநேகமா எல்லாக் கடையிலயும் இந்த அல்வா கிடைக்குது. நானும் ஆசையா வாங்குவேன். ஆனா, எவனுக்கும் இதை ஒழுங்காச் செய்யத்தெரியலை. சிலர்தான் இவ்வளவு பிரமாதமாச் செய்வாங்க.’

‘இவ்ளோ தூரம் ஆசைப்படறே, ஒரு துண்டு சாப்பிட்டா என்னவாம்?’ என்று இவர் தன்னிடமிருந்த கடைசி விள்ளலை அவருக்குக் கொடுத்தார்.

‘வேண்டாம்’ என்று உறுதியாக மறுத்துவிட்டார் அவர். ‘என்னோட பிரச்சனை, இந்த ஒரு துண்டு அல்வாவைச் சாப்பிடறது இல்லை. இதைச் சாப்பிட்டப்புறம் ஓடிப்போய் இன்னும் நாலு துண்டு எடுத்துச் சாப்பிடுவேன். அதைத் தவிர்க்கணும்ன்னா, இதைத் தவிர்க்கணும். வேற வழியில்லை’ என்றபடி விறுவிறுவென்று எழுந்து சென்றுவிட்டார்.

உண்மையில் இன்றைய அல்வா மிக நன்றாக இருந்தது. இதெல்லாம் நடக்காவிட்டால் நான் இன்னொரு துண்டு எடுத்துச் சாப்பிட்டிருப்பேன். ஹூம்!

Exit mobile version