Site icon என். சொக்கன்

உதவிகள்

இன்று புதியவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வேறொரு துறையிலிருந்து எங்களுடைய (தகவல் தொழில்நுட்பத்) துறைக்கு மாற முனைந்துகொண்டிருக்கிறார். அதனால், இங்கு அவருடைய பணித் தேடல் தொடர்பான சில கேள்விகள், ஐயங்களை எழுப்பினார். நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி விளக்கினேன்.

பேச்சின் நிறைவில், விடைபெறுவதற்குமுன் அவர் தயங்கித் தயங்கி ஒரு விஷயம் சொன்னார், ‘சார், யாரோ ஒரு Strangerக்கு இவ்ளோ பொறுமையா நேரம் செலவழிச்சு விளக்கம் சொல்லியிருக்கீங்க. பதிலுக்கு உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேட்கிறது தப்பு. ஆனாலும் என் மனசு ஒப்பமாட்டேங்குது. அதனால கேட்கறேன். இதேமாதிரி நாளைக்கு என்னோட Field தொடர்பா உங்களுக்கோ உங்க நண்பர்களுக்கோ ஏதாவது தகவல் தெரிஞ்சுக்கணும்ன்னா சொல்லுங்க, கண்டிப்பா நான் உதவறேன்.’

அவருடைய இயல்பான இந்தக் கேள்வி எனக்குள் பெரிய சிலிர்ப்பலையை எழுப்பிவிட்டுவிட்டது. பிறர் தனக்குச் செய்யும் உதவியை ஏதாவது ஒருவிதத்தில் திரும்பச் செய்துவிடவேண்டும், கடனாளியாக இருக்கக்கூடாது என்ற அந்தத் துடிப்புதான் எத்தனை அழகானது, இனிமையானது, அந்த நன்றியுணர்ச்சிதான் எவ்வளவு மேன்மையானது!

யோசித்துப்பார்த்தால், நான் அவரிடம் பேசியதற்குக்கூட அந்த நன்றியுணர்ச்சிதான் காரணம். பலர்முன் நான் Strangerஆக நின்று கேள்விகளைக் கேட்டிருக்கிறேன், அவர்களும் முகம் சுளிக்காமல் உதவியிருக்கிறார்கள். அப்போது பெற்ற கடனுக்கான EMIஐத்தான் நான் இவர் மூலமாகத் திரும்பச் செலுத்துகிறேன். இவர் இன்னொருவருக்குச் செலுத்துவார்.

இன்றைய உலகத்தில் தன்னலமாக இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்கிறார்கள். அது உண்மைதான் என்று எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. ஆனால், அது எத்தனை அசிங்கமான பிழைப்பாக இருக்கும் என்று இதுபோன்ற நேரங்களில்தான் புரிகிறது.

Exit mobile version