Site icon என். சொக்கன்

கொடை

ஒரு சிறு கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்.

அப்போது, இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்தார், கடைக்காரரைப் பார்த்துக் கன்னடத்தில் ஏதோ கேட்டார்.

அந்தக் கடைக்காரருக்குக் கன்னடம் தெரியாதுபோல, என்னை அழைத்து, ‘சார், இவர் என்ன சொல்றார்ன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா?’ என்றார் ஹிந்தியில்.

நான் அந்த இளைஞரிடம், ‘என்னங்க வேணும்?’ என்றேன் சுமாரான கன்னடத்தில்.

அவர் அதற்குத் தூய கன்னடத்தில் பதில் சொன்னார், ‘கிராமத்திலிருந்து வேலை தேடி இங்க வந்தேன் சார். எந்த வேலையும் கிடைக்கலை. ரொம்பப் பசிக்குது. காசு இல்லை. எதாவது சாப்பிடக் கிடைச்சா நல்லா இருக்கும்.’

Image by Tumisu from Pixabay

நான் அவர் சொன்னதைக் கடைக்காரருக்கு ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னேன். அவர் ‘புரிந்தது’ என்னும்விதமாகத் தலையாட்டிவிட்டு, ‘வடா பாவ் சாப்பிடறியா?’ என்றார் அந்த இளைஞரிடம்.

அவருக்கு வடா பாவ் என்றால் என்ன என்று தெரியவில்லை. ‘பசிக்குது, எதாவது சாப்பிடக் கொடுங்க’ என்றார்.

‘சரி, உட்காரு’ என்று அவரை அமரச்சொல்லிவிட்டுக் கடைக்காரர் உள்ளே சென்றார், ஒரு தட்டில் நான்கு பிரெட் பஜ்ஜிகளைப் போட்டு நறுக்கி, மேலே வெங்காயம் தூவி, ஓரமாகச் சட்னி வைத்துக் கொண்டுவந்தார், ‘நல்லாச் சாப்பிடு, இன்னும் வேணும்ன்னாலும் கேளு’ என்றார் ஹிந்தியில்.

இவர் பேசுவது அவருக்குப் புரிந்திருக்காது. அவர் பேசுவது இவருக்குப் புரிந்திருக்காது. ஆனால் சாப்பாட்டுக்கு மொழி ஏது? பரபரவென்று சாப்பிடத் தொடங்கினார்.

இரண்டு வாய் சாப்பிட்டபின் என்னை நிமிர்ந்து பார்த்து, ‘ரொம்ப நன்றி சார்’ என்றார்.

‘நான் என்னங்க செஞ்சேன். அவங்கதான் உங்களுக்குச் சாப்பாடு போட்டிருக்காங்க. போகும்போது அவங்க மொழியில தன்யவாத்ன்னு சொல்லிட்டுப் போங்க, சந்தோஷப்படுவாங்க’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

Exit mobile version