Site icon என். சொக்கன்

பழைய பஞ்சாங்கம்

சமீபத்தில் பெரும் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் ஒருவர். அவருடைய பழைய ட்வீட்கள், ஃபேஸ்புக் செய்திகளைத் தோண்டி எடுத்துச் சிலர் வம்புக்கு இழுக்கிறார்கள். அதாவது, அவர் முன்பு பேசிய சில விஷயங்களை இப்போது சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்துகிறார்கள்.

இதைப் பார்க்கும்போது நகைச்சுவையான ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் அமேசானில் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கு ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருந்த என்னுடைய நண்பர் ஒருவர் என்னை ரகசியமாக அழைத்துச் சொன்னார், ‘நீங்க இதுக்குமுன்னாடி ஃபேஸ்புக், ட்விட்டர்ல அமேசான் டெலிவரி சரியில்லை, ப்ராடக்ட் சரியில்லை, வெப்சைட் மெதுவா இயங்குதுன்னு எப்பவாச்சும் எதாச்சும் புலம்பியிருப்பீங்க. அதையெல்லாம் சிரமம் பார்க்காமல் தேடி எடுத்து டெலீட் பண்ணிடுங்க. இல்லாட்டி பிரச்சனை வரும். கோள் மூட்டி விடறதுக்குன்னு சில பேர் எல்லாக் கம்பெனியிலயும் இருப்பாங்க. எதுக்குத் தேவையில்லாத வம்பு?’

அவர் சொன்னது எனக்குத் திகைப்பாக இருந்தது. ஆனால், உண்மையில் நடக்கும் என்று தோன்றியது. ஓரிரு ட்வீட்களைத் தேடி எடுத்து அழித்தேன். அதன்பிறகு, அது பெரிய மலைப்பாகவும் எரிச்சலாகவும் தேவையில்லாத வேலையாகவும் தோன்றியது. போங்கடா என்று விட்டுவிட்டேன்.

Image by Raphael Silva from Pixabay

நல்லவேளையாக, நான் அங்கிருந்த நான்கரை ஆண்டுகளுக்கும் எனக்கு அதுபோல் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. ஆனால், கண்டிப்பாக வந்திருக்காது என்று யாரால் சொல்லமுடியும்? என் நண்பர் சொன்னதுபோல் வம்பு மூட்டச் சிலர் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்தந்த வயதுக்குரிய மனநிலைகளும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும்கூட வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அவற்றை மறைத்து, ஒளித்து என்ன ஆகப்போகிறது? வெளியில் எடுத்துப் பேசிதான் என்ன ஆகப்போகிறது? “பாரதிதாசன் கவிதைகள்” தொகுப்பில் அவர் முன்னாட்களில் எழுதிய சில பக்திப் பாடல்கள் உள்ளன. அதனால் அவருடைய பின்னாள் நாத்திகக் கொள்கைக்கு என்ன குறை வந்துவிடும்?

Exit mobile version