Site icon என். சொக்கன்

நாடகமன்றோ நடக்குது

அலுவலகத்தில் எனக்குச் சற்றுத் தொலைவில் இரண்டு பேர் அமர்ந்துள்ளார்கள். இருவரும் தீவிரமாக ஏதோ தொழில்நுட்ப விஷயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஏதோ கேட்கிறார், இன்னொருவர் அதற்குப் பதில் சொல்கிறார், இப்படி மாற்றி மாற்றி ஐந்து நிமிடமாக உரையாடல் நடக்கிறது.

‘இதெல்லாம் எல்லா ஆஃபீஸ்லயும் வழக்கமா நடக்கற விஷயம்தானே. என்னய்யா சொல்லவர்றே?’ என்று கடுப்பாகாதீர்கள். விஷயம் இருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் ஒரே வயதுதான், டிஷர்ட், ஜீன்ஸ் அணிந்த நவீன இளைஞர்கள். ஆனால், இவர்களுக்கு இடையிலான பேச்சு துளியும் இயல்பாக இல்லை, ஏதோ மேடையில் பேசுவதுபோன்ற பாவனையில் கவனமாகச் சொற்களைக் கோக்கிறார்கள். சொல்லப்போனால், அந்த உரையாடல் ஒரு நாடக வசனம்போல் இருக்கிறது, சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டு நீதிபதியிடம் பேசுகிற ஒருவரைப்போல் எண்ணி எண்ணிப் பேசுகிறார்கள், அன்றாடம் நடக்கிற விஷயங்களைப் பேசினாலும் அதைப் பேசும் விதத்தில் மிகப் பெரும் போலித்தனம்.

சிறிது நேரத்துக்குமேல் என்னால் இதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. என்ன விஷயம் என்று எழுந்து நின்று பார்த்தேன். புதிர் விலகியது.

அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு லாப்டாப், அதில் ஜூம் திறந்திருக்கிறது, அதில் இன்னொருவர் இருக்கிறார், இவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இவர்கள் எதிரில் உள்ளவரிடம்கூட நாடகத்தனமாகப் பேசுகிறார்கள். ஒருவேளை, இந்த மூவரும் ஓர் அறையில் அமர்ந்திருந்தால் பேச்சு இன்னும் இயல்பாக இருந்திருக்கும்.

Image by Alexandra_Koch from Pixabay

மின் கூட்டங்கள் நம்மீது வெளிச்சம் விழுந்துகொண்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து நினைவுபடுத்தி நம்மை இயல்பிழக்கச்செய்துவிடுகின்றன.

Exit mobile version