Site icon என். சொக்கன்

கலைமகள் கைப்பொருள்

ஒரு பெரிய வீட்டில் வீணையொன்று கவனிக்க யாருமின்றி இருக்கிறது. அதை ஒருத்தி எடுத்து மீட்டுகிறாள், அப்போது அவள் அந்த வீணையை அழைத்துப் பாடுவதுபோல் கண்ணதாசன் இப்படி எழுதுகிறார்:

கலைமகள் கைப்பொருளே!

இந்த வரிக்கான பொருள் மிக எளிமையானது, நேரடியானது. கலைமகள் (சரஸ்வதி) கையில் இருக்கும் பொருள் வீணை. அதனால் அது ‘கலைமகள் கைப்பொருள்’.

‘கைப்பொருள்’ என்பதற்குக் கையில் உள்ள பொருள் (Object) என்பதைவிடச் சிறப்பான ஒரு விளக்கமும் இருக்கிறது, கையில் உள்ள பொருள், அதாவது செல்வம் (Wealth), கொஞ்சம் கொச்சையாகச் சொல்வதென்றால் Bank Balance!

எடுத்துக்காட்டாக, ‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர்’ என்று எழுதுகிறார் ஔவையார். அதாவது, ஒருவன் படிக்காவிட்டாலும் பரவாயில்லை, செல்வத்துடன் இருந்துவிட்டால் போதும், எல்லாரும் அவனைச் சென்று பார்த்து வரவேற்பார்கள், குழைவார்கள், மதிப்பார்கள்.

இந்த வரி ‘நல்வழி’ என்ற நூலில் வருகிறது. இதன் தொடர்ச்சிபோல் ‘கொன்றைவேந்தன்’ என்ற நூலில் இன்னொரு வரியை எழுதியிருக்கிறார் ஔவையார்: ‘கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி’. பணச் செல்வத்தைவிட உண்மையான செல்வம் கல்விதான் என்று இதற்குப் பொருள்.

ஆக, கைப்பொருள் என்றால் செல்வம் என்று பொருள். அதனால், கண்ணதாசனுடைய ‘கலைமகள் கைப்பொருளே’ என்ற வரியை நாம் ‘கலைமகளுடைய கையில் இருக்கும் வீணையே’ என்று நேரடியாகமட்டும் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை, ‘கலைமகளுடைய செல்வமே’ என்று வீணையைச் சிறப்பித்துப் பேசுவதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இன்னும் ஓர் அடுக்கு மேற்சென்றால், கலைமகளுடைய செல்வம் கலைகள்தான், வீணை இசைக்கலையின் குறியீடு என்றுகூட எண்ணலாம்.

***

தொடர்புடைய புத்தகம்: நாலு வரி நோட்டு: திரைப்படப் பாடல்களின் வழியாகக் கொஞ்சம் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, அறிவியல், இன்னும் பல…

கிண்டில் மின்னூல்

அச்சு நூல்

Exit mobile version