Site icon என். சொக்கன்

கற்றல் சுகம் (13)

டிஜிட்டல் தலைமுறையாகிய நாமெல்லாம் எதைக் கற்பதென்றாலும் முதலில் இணையத்தை நாடுவது இயல்புதான். அதே நேரம், நாம் தேடுவதற்கெல்லாம் இணையத்தில் (ஓரளவு) பதில் கிடைக்கிறது என்பதால், இரண்டு மிகத் தவறான நம்பிக்கைகளுக்குள் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்:

  1. இணையத்தில் அனைத்தையும் கற்றுக்கொண்டுவிடலாம்
  2. அனைத்தைப்பற்றியும் இணையத்தில் இருக்கும் தகவல்கள்தான் முழுமையானவை; அதற்குமேல் ஏதும் இல்லை, அப்படியே இருந்தாலும் அவை முக்கியத்துவமற்றவை

முதலில், இணையம் என்பது அறிவின் மூலம் இல்லை, அதைச் சேமித்துவைக்கிற இடம், அவ்வளவுதான். புரிகிறாற்போல் சொல்வதென்றால், அதைப் பணம் அச்சடிக்கிற தொழிற்சாலையாக எண்ணுவதைவிட, பணத்தைப் போட்டுவைத்துவிட்டு வேண்டிய நேரத்தில் எடுத்துக்கொள்கிற வங்கியாக எண்ணுவது சரியாக இருக்கும்.

ஒரே வேறுபாடு, வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டவரேதான் எடுத்துச் செலவழிப்பார்; ஆனால் இணையத்தில், மிகப்பலர் தகவல்களைப் போடுவார்கள், அதை மிகப்பலர் பயன்படுத்திக்கொள்ளுவார்கள், அந்தவிதத்தில் உலகின் மிகப்பெரிய Joint Account அதுதான்.

அதேபோல், வங்கியில் பணத்தைப் போட்டால்தான் எடுக்கமுடியும்; அதைப்போல, நாம் தேடுகிற தலைப்பில் நமக்குமுன் யாரேனும் தகவல்களைப் போட்டிருந்தால்தான் அவை நமக்குக் கிடைக்கும்.

ஆக, கற்றலுக்கு இணையத்தைப் பயன்படுத்தும்போதே, நமக்குமுன்னால் அங்கு அந்தத் தகவல்களைச் சேர்த்தவர்களை நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒருவேளை, யாரும் அப்படித் தகவல்களைச் சேர்க்காவிட்டால், ‘இணையத்தில் அனைத்தையும் கற்றுக்கொண்டுவிடலாம்’ என்கிற நம்பிக்கை பொய்யாகிவிடும்.

அடுத்தபடியாக, அப்படிச் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல்களும் முழுமையாக இருக்கும் என்று உறுதியில்லை. சில ஆளுமைகள், தலைப்புகளைப்பற்றி இணையத்தில் மிகக் குறைவான தகவல்களே கிடைக்கும், சிலவற்றைப்பற்றி ஓரளவு தகவல்கள் கிடைக்கும், சிலவற்றைப்பற்றி ஏராளமான தகவல்கள் கிடைக்கும், இப்படி அளவு எதுவானாலும், இணையத்தில் கிடைக்கிறவற்றைமட்டும் படித்துவிட்டு அதை முழுக்கக் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று கருதுவது முட்டாள்தனம்.

எடுத்துக்காட்டாக, சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புகிற ஒருவருக்கு இணையத்தில் ஏராளமான கட்டுரைகள், நூல்கள், வீடியோக்கள், வகுப்புகளெல்லாம் உள்ளன. அவற்றையெல்லாம் படித்தவுடன் அவருக்குச் சொந்தத் தொழில்பற்றி ஓரளவு தெளிவான ஒரு பார்வை அமையும். அதே நேரம், அவர் ஒரு தொழிலதிபருடன் பேசுகிறார், அல்லது துணிந்து தொழிலில் இறங்கி ஓரிரு ஆண்டுகள் உழைக்கிறார் என்றால், அதைவிடக் கூடுதலான விஷயங்களைக் கற்றுக்கொள்வார்.

ஆக, இணையக் கற்றலுடன் இணையத்துக்கு வெளியிலான கற்றலும் முக்கியமாகிறது. இதற்குக் கூடுதல் நேரம், உழைப்பு செலவாகும் என்பதால்மட்டும் நாம் இதைப் புறக்கணித்துவிட்டால் கற்றல் முழுமையாகாது, தேவையான நேரத்தில் இதையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இணையத்துக்கு வெளியிலான கற்றலில் பல வகைகள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நூலகங்கள், ஆவணக் காப்பகங்களுக்குச் செல்லுதல், நாம் கற்க விரும்பும் தலைப்புடன் தொடர்புடைய இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளுதல், கல்வெட்டுகள், செப்பேடுகள், தொல்பொருட்களை நேரில் காணுதல், அகழ்ந்தெடுத்தல், நம் தலைப்புடன் தொடர்புடைய நபர்களைப் பேட்டி எடுத்தல், ஒரு குறிப்பிட்ட பணியை அல்லது பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுதல், இப்படி இன்னும் பலவற்றைக் குறிப்பிடலாம்.

டாடா குழுமத்தின் தலைவராகப் பணியாற்றிய ரதன் டாடா அந்நிறுவனத்தில் ஓர் அடிமட்டத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தவர். உலைக்கு எரிபொருள் அள்ளிப்போடுவதில் தொடங்கி இயந்திரங்களைக் கட்டுப்படுத்துவது, பழுது பார்ப்பது என்று எல்லாவிதமான வேலைகளையும் பார்த்திருக்கிறார்.

இவையெல்லாம் ஏதோ பந்தாவுக்காகச் செய்யப்பட்ட விஷயங்கள் இல்லை, உண்மையிலேயே களத்தில் இறங்கி வேலை செய்யும்போது நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். Event Managementபற்றிப் பல நூல்கள், கட்டுரைகளைப் படிப்பதைவிட, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக (அல்லது சொதப்பலாக) நடத்துவதில் கூடுதலான விஷயங்களைக் கற்கலாம்.

இணையத்துக்கு வெளியிலான கற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி?

  1. நாம் என்ன கற்கவிரும்புகிறோம் என்பதில் தெளிவு இருக்கவேண்டும்; அதுவே நம்முடைய தேடலை வழிநடத்தவேண்டும்; இல்லாவிட்டால் எல்லாத் திசைகளிலும் ஓடி ஏராளமான விஷயங்களைத் திரட்டுவோம், அப்புறம் உட்கார்ந்து யோசித்தால் என்ன படித்தோம் என்பதே நினைவுக்கு வராது
  2. வல்லுனர்களிடம் பேசும்போது, போதுமான முன் தயாரிப்புடன் செல்லவேண்டும், ‘உங்களைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று பொத்தாம்பொதுவாகத் தொடங்குவது அவர்களை மதிப்பதாகாது
  3. அதேபோல், ஒரு துறையில் வல்லுனர்கள் என்பதாலேயே அவர்கள் நன்கு கற்றுத்தருகிறவர்களாக இருப்பார்கள் என்று பொருளில்லை; அவர்கள் கொட்டுகிற கச்சாப்பொருளைக் கொண்டு வேண்டிய உணவுப்பண்டத்தைச் சமைக்கிற வேலை நம்முடையது
  4. கள ஆய்வுகளை இயன்றவரை ஒலி, ஒளி வடிவில் பதிவு செய்துவைக்கலாம்; பின்னர் திருப்பிப்பார்ப்பதற்கு வசதி
  5. இணையத்துக்கு வெளியில் காண்கிற விஷயங்களையும் அப்படியே நம்பிவிடக்கூடாது; முன்பு நாம் பார்த்த ‘உறுதிப்படுத்தல்’ நுட்பங்களை இங்கும் பயன்படுத்தவேண்டும்; எடுத்துக்காட்டாக, ஒரு வல்லுனர் சொல்லும் தகவல்களை இன்னொரு வல்லுனருடனோ ஆவணத்துடனோ ஒப்பிட்டுப்பார்க்கலாம்
  6. மிக முக்கியமாக, இயன்றவரை கள ஆய்வுகளை இணையத்துக்குக் கொண்டுவரலாம்; யூட்யூப் போன்ற தளங்களில் பேட்டிகளாக, வீடியோக்களாக, கட்டுரைகளாக, ஸ்கான் செய்த படங்களாகப் பதிவு செய்யலாம்; உங்களுக்குப்பிறகு இந்தத் தலைப்பைக் கற்க முனைபவர்களுக்கு இவை பயன்படும்; இணைய அறிவுக் கணக்கில் அவை உங்களுடைய இட்டுவைப்புகளாக இருக்கும்

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

Exit mobile version