Site icon என். சொக்கன்

கற்றல் சுகம் (14)

எங்கள் நிறுவனத்தில் புதிதாகப் பணிக்குச் சேர்கிற எல்லாருக்கும் Ramp-up Buddy என்று ஒருவரை நியமிப்பார்கள். அதாவது, புதிதாக வந்திருப்பவர் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றத் தொடங்குவதற்கு உதவும் நண்பராக இவர் செயல்படுவார்.

இதற்காக, அடுத்த சில மாதங்கள் இந்த இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவார்கள். புதியவருடைய ஐயங்கள், கேள்விகளுக்கெல்லாம் பழையவர் பதில் சொல்வார், பணி சார்ந்த தொழில்நுட்பங்கள், வழக்கங்கள், செயல்முறைகளைக் கற்றுத்தருவார், மற்ற ஊழியர்களை அவருக்கு அறிமுகப்படுத்திவைப்பார், அவருடைய பணியை நட்பு அடிப்படையில் மேற்பார்வை செய்து ஊக்குவிப்பார், திருத்தங்கள் சொல்வார், இதன்மூலம் அவரை வேலைக்குத் தயாராக்குவார்.

சில மாதங்களுக்குமுன்னால், எங்கள் குழுவில் ஒரு புதிய பொறியாளர் இணைந்தார். அவருக்கு Ramp-up Buddyயாகச் சந்திரன் என்பவரைத் தேர்ந்தெடுத்தார் என் மேலாளர்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது, எங்களுக்குச் சிறிது வியப்பு. ஏனெனில், அந்தச் சந்திரனே எங்கள் நிறுவனத்துக்கு ஓரளவு புதியவர்தான்; அவரே இன்னும் பயிற்சி நிலையில்தான் இருந்தார் என்றுகூடச் சொல்லலாம். அடிப்படையில் அவர் நல்ல திறமைசாலியாக இருந்தபோதும், அவர் எல்லா வேலைகளையும் சரியாகக் கற்றுக்கொண்டுவிட்டார் என்ற நம்பிக்கையோ, அவரிடம் ஒரு வேலையை நம்பி ஒப்படைக்கலாம் என்ற எண்ணமோ எங்களில் யாருக்கும் இன்னும் வந்திருக்கவில்லை. ஆகவே, சந்திரனிடம் இன்னொருவர் பயிற்சி பெறுவதா என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டோம்.

ஆனால், எங்கள் மேலாளர் இந்தத் தீர்மானத்தில் உறுதியாக இருந்தார், ‘சந்திரன் ஒரு மிக நல்ல Ramp-up Buddyயா இருப்பார், பொறுத்திருந்து பாருங்க’ என்றார்.

அடுத்த சில வாரங்களில், எங்கள் மேலாளருடைய நம்பிக்கையைச் சந்திரன் மிக நன்றாகக் காப்பாற்றினார். இதற்குமுன் எங்கும் வேலைசெய்திராத, முதன்முதலாக ஒரு நிறுவனத்தில் பணிக்கு வருகிற அந்தப் புதியவருக்கு எல்லா விஷயங்களையும் நன்றாகக் கற்றுத்தந்து தயாராக்கினார், இதனால் அவருடைய தனிப்பட்ட பணியிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

எந்தவொரு விஷயத்தையும் நாமாகக் கற்றுக்கொள்வது வேறு, அதை இன்னொருவருக்குக் கற்றுத்தருவது வேறு, இந்த இரண்டாவது சூழ்நிலையில், அதாவது, ஏதோ ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும் என்கிற சூழ்நிலையில் நமக்கு ஒரு கூடுதல் பொறுப்பு வந்துவிடுகிறது. ஆகவே, நாமாகக் கற்றுக்கொள்ளும்போது எவ்வளவு முனைப்பை வழங்குவோமோ அதைவிடக் கூடுதலான முனைப்புடன் இதற்காக உழைக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் பள்ளியில் படிக்கும்போது வரலாற்றை மேலோட்டமாகப் படித்திருக்கலாம், மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கியிருக்கலாம், ஆனால், அவரே ஓர் ஆசிரியராக மாறும்போது, அல்லது, அவருடைய குழந்தை, ‘எனக்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக்கொடுங்கப்பா’ என்று கேட்கும்போது அப்படி டபாய்க்க இயலாது. உண்மையிலேயே அந்தப் பாடத்தை ஊன்றிக் கற்றாகவேண்டும், சரியாகப் புரிந்துகொண்டாகவேண்டும், இல்லாவிட்டால் பிறருக்கு அதை நன்றாகக் கற்பிக்க இயலாது. “The best way to learn is to teach” என்று ஆங்கிலத்தில் இதை அழகாகச் சொல்வார்கள்.

கற்க விரும்பும் நாம் இந்த மனித உளவியலை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, இன்னொருவருக்குக் கற்பிக்கிறேன் பேர்வழி என்று பொறுப்பை இழுத்துப் போட்டுக்கொண்டு, அதைச் சாக்காக வைத்து நாம் நன்றாகக் கற்றுக்கொண்டுவிடலாம்.

எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டில் நான் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கற்க விரும்பினேன். ஆனால், என்னுடைய அலுவலகக் குழுவில் அந்தத் தொழில்நுட்பத்துக்கு உடனடித் தேவை எதுவும் இல்லை. ஆகவே, அடுத்தடுத்து வேறு ஏதாவது வேலை வந்துகொண்டே இருந்தது, நானும் இந்தக் கற்றலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். அது எனக்கு மிகுந்த குற்றவுணர்வை அளித்தது.

ஆகவே, நான் ஒரு வேலை செய்தேன்; எங்கள் அணியில் மாதந்தோறும் நடக்கிற தொழில்நுட்பக் கற்பித்தல் நிகழ்வில் ஓர் ஆசிரியராக என்னைப் பதிவுசெய்துகொண்டேன். ‘அடுத்த மாசம் இத்தனாம்தேதி நான் இந்தத் தொழில்நுட்பத்தைப்பற்றி எல்லாருக்கும் பாடம் எடுக்கறேன்’ என்று அங்கே வாக்குக் கொடுத்துவிட்டேன்.

அதன்பிறகு, என்னுடைய கற்றலில் எந்தத் தடையும் இல்லை. சொல்லப்போனால், நானே சொந்தமாகக் கற்றிருந்தால் எவ்வளவு முனைப்புடன் கற்றிருப்பேனோ அதைவிடப் பலமடங்கு ஆர்வத்துடன் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன். அதன் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து வெளிவந்தேன். அதற்கு முதல் காரணம், இதைப் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் அளவு நமக்குத் தகுதி இருக்கவேண்டுமே என்கிற அக்கறை, இரண்டாவது (முக்கியமான) காரணம், ஒழுங்காகக் கற்றுக்கொள்ளாமல் சக ஊழியர்கள்முன்னால் நின்றால் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்திவிடுவார்களே என்கிற அச்சம்.

காரணம் எதுவானால் என்ன? கற்றல் நிகழ்ந்துவிட்டது. அதுதானே எனக்கு முக்கியம்!

கற்க விரும்பும் யாரும் இந்த ‘திடீர் ஆசிரியர்’ உத்தியை முயன்றுபார்க்கலாம். நாம் எதைக் கற்க விரும்புகிறோமோ அந்தத் தலைப்பை இன்னொருவருக்குக் கற்றுத்தருகிற பொறுப்பை வலியச் சென்று ஏற்றுக்கொள்ளலாம். மற்றதை உங்கள் மனம் பார்த்துக்கொள்ளும்.

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

Exit mobile version