Site icon என். சொக்கன்

விரும்பும் வரிகள்

கிண்டிலில் ஆங்கில நூல்களைப் படிக்கும்போதெல்லாம், ஆங்காங்கே கோடிட்ட சில வரிகளைக் காணலாம். Highlighted Portions எனப்படும் இந்த வரிகள் அந்நூலின் முக்கியமான பகுதிகளாக அல்லது மேற்கோள்களாக இருக்கும், அல்லது, மிக நன்றாக எழுதப்பட்ட பகுதிகளாக இருக்கும். ஆனால், இந்த வரிகளை அந்த நூலின் ஆசிரியரோ பதிப்பாளரோ தேர்ந்தெடுக்கவில்லை, அதைப் படித்த வாசகர்கள்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், இதற்குச் சான்றாக, ஒவ்வொரு வரியையும் எத்தனைப் பேர் விரும்பி ரசித்துள்ளார்கள் என்கிற எண்ணிக்கையும் அங்கேயே தெரியும். ‘அட, எனக்குப் பிடித்த இந்த வரியை இத்தனை ஆயிரம் பேர் விரும்பியுள்ளார்களே’ என்று வியக்கலாம், அல்லது, ‘இத்தனை பேர் விரும்பும் அளவு இந்த வரியில் என்ன சிறப்பு இருக்கிறது?’ என்று யோசிக்கலாம், நூலைப் படித்தபின், அதில் தனக்குப் பிடித்த வரிகளையெல்லாம் ஒரே இடத்தில் தொகுத்துக் காணலாம், இப்படி அடிக்கோடிடப்பட்ட வரிகளின் அடிப்படையில் அந்த ஆசிரியர்/பதிப்பாளர் தன்னுடைய மற்ற நூல்களை இன்னும் செழுமைப்படுத்தலாம், மின்னூல் தொழில்நுட்பத்தில்மட்டுமே சாத்தியமாகிற மிகச்சிறந்த வசதி இது.

குறிப்பாக, மாணவர்கள் இந்த வசதியை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். இப்போதெல்லாம் பாடப் புத்தகங்கள் அனைத்தும் கிண்டிலில் வந்துவிட்டதால், படிக்கும்போதே முக்கியமான வரிகளை Highlight செய்துகொண்டுவிடுகிறார்கள், பின்னர் தேர்வின்போது அவற்றை ஒருமுறை புரட்டிப்பார்ப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

உங்களைச் சுற்றியுள்ள படிக்கும் பழக்கமில்லாதவர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த வசதி பயன்படும். நீங்கள் ஒரு நூலைப் படிக்கும்போது அதன் முக்கியப் பகுதிகளை அடிக்கோடிட்டுவைத்தால், ‘இதைமட்டுமாவது படி’ என்று உங்கள் நண்பர்/கணவர்/மனைவி/குழந்தைகளுக்குக் கொடுக்கலாம், அவர்கள் பல மணிநேரங்களைச் செலவிடாமல் சில நிமிடங்களில் அந்நூலின் சாரத்தைப் புரிந்துகொள்ளும்படி செய்யலாம், அந்தவிதத்தில் நீங்கள் வாசகர் என்ற நிலையிலிருந்து உயர்ந்து Curator (சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பவர்) ஆகலாம்.

Exit mobile version