Site icon என். சொக்கன்

குளிர்ச்சன்னல் #குறுங்கதை

பேருந்தில் எனக்கு எப்போதும் ஜன்னலோர இருக்கைதான் பிடிக்கும். எல்லா ஜன்னல்களும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டால்தான் மற்ற இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பேன்.

இன்று அதிகாலையில் ஒரு வேலை. பேருந்து காலியாக இருந்தது. பிடித்த ஜன்னலை எடுத்துக்கொண்டேன்.

சில நிமிடங்களில் பேருந்து பெருமளவு நிரம்பிவிட்டது, கிளம்பிவிட்டது.

அப்போதுதான் நான் செய்த முட்டாள்தனத்தை உணர்ந்தேன். டிசம்பர் மாதப் பெங்களூருக் காலைக் குளிருக்கு ஜன்னலோர இருக்கைகள் ஆகாது. இயன்றவரை வண்டிக்குள் அமர்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும். ஓட்டுநருடைய எஞ்சின் சூட்டுக்கு அருகில் அமர இயலுமானால் இன்னும் நல்லது.

அதனால் என்ன? ஜன்னலை மூடினால் போச்சு.

Image by naeim a from Pixabay

ம்ஹூம், என்னுடைய நேரம், நான் அமர்ந்திருந்த ஜன்னல் மூடவில்லை. இழுத்து இழுத்துப் பார்த்தேன், பயனில்லை, ஏதோ சிக்கிக்கொண்டிருந்தது.

வேறு இடம் மாறிவிடலாமா?

அதற்கும் வழியில்லை. இதற்குள் பேருந்தில் மற்ற இருக்கைகளெல்லாம் நிரம்பிவிட்டன. எனக்கு அருகிலிருந்த இருக்கைமட்டும்தான் காலி.

மெல்ல நடுங்கியபடி ஜன்னலோர இருக்கையிலிருந்து நகர்ந்து அமர்ந்தேன், அடுத்த நிறுத்தத்தில் ஒரு நல்ல பெருங்குண்டர் எங்கள் பேருந்தில் ஏறவேண்டும் என்று விரும்பிக்கொண்டேன்.

***

என். சொக்கன் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்:

Exit mobile version