Site icon என். சொக்கன்

கொண்டாட்ட வரம்புகள்

இன்று காலை, பேருந்தில் எனக்கு முன் வரிசையில் இரண்டிரண்டாக நான்கு இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள், தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். நால்வரும் சில மாதங்களுக்குமுன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு முதல் வேலையில் சேர்ந்துள்ளவர்கள் என்பது அவர்களுடைய உரையாடலிலிருந்து தெரிந்தது.

சிறிது நேரத்துக்குப்பின் அவர்களுடைய பேச்சு ஐபிஎல்லை நோக்கித் திரும்பியது. இந்த ஆண்டு சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையிலான ஆட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்று ஒருவன் சொன்னான். அதை இன்னொருவன் ஆமோதித்தான், ‘டிக்கெட் ஐயாயிரம் ரூபாயாவது வரும். பரவாயில்லை, லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ். விடக்கூடாது.’

‘ஐயாயிரமா?’ என்று திகைப்புடன் கேட்டான் ஒருவன், ‘அவ்ளோ காசு ஆகுமாடா?’

‘ஆமாம்டா’ என்றான் இன்னொருவன், ‘தோனி, கோலியெல்லாம் விளையாடறாங்கன்னா சும்மாவா?’

‘இருந்தாலும் ஐயாயிரம் ரூபாய் ஜாஸ்திடா’ என்றான் அவன். ‘நீங்க வேணும்ன்னா போய்ட்டு வாங்க. நான் டிவியில பார்த்துக்கறேன்.’

அவ்வளவுதான். மற்ற மூவரும் அவன்மீது பாயாத குறையாகப் பேசத் தொடங்கினார்கள். ‘வாழ்க்கையை இனிமையாக வாழவேண்டும். அதற்கு ஐயாயிரம் ரூபாய் என்பது ஒரு தொகையே இல்லை, அதைச் செலவிடத் தயங்கக்கூடாது’ என்பதுதான் அவர்களுடைய அடுத்த ஐந்து நிமிடப் பேச்சின் சுருக்கம்.

அந்த இளைஞன் திரும்பத் திரும்ப எல்லாரையும் மறுத்துக்கொண்டிருந்தான். ஆனால், ஓரிரு முயற்சிகளுக்குப்பிறகு, அவனுடைய குரல் தணியத் தொடங்கியது. அவன் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. எப்படியாவது இந்தப் பேச்சு வேறு திசையில் மாறிவிட்டால் பரவாயில்லை என்று ஏங்குவதுபோல் இழுத்து இழுத்து ஏதோ சொன்னான்.

மற்ற மூவரும் அதைத் தங்களுடைய வெற்றியாக நினைத்துக்கொண்டார்கள். ‘அன்னிக்கு நமக்குத் திருவிழாதான். செமையான டிக்கெட்டுக்கு நான் ஏற்பாடு பண்றேன். எல்லாரும் காசு ரெடி பண்ணிடுங்க’ என்றான் ஒருவன்.

இப்போது அந்த இளைஞன் மீண்டும் பேசினான், ‘இல்லைடா. என்னால அவ்வளவெல்லாம் செலவழிக்கமுடியாது. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. நான் மேட்ச் பார்க்க வரலை’ என்றான்.

பேருந்தில் கசப்பான சிறு அமைதி. எல்லாரும் எதுவும் பேசாமல் மொபைலைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்த இளைஞனைப் போன்றவர்களை நான் கல்லூரியிலும் அதன்பிறகும் நிறையச் சந்தித்திருக்கிறேன். வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறவர்கள். ஆனால், அவர்கள் பணத்தின் மதிப்பை அறிந்திருப்பதாலோ, வேறு பொருளாதாரச் சூழ்நிலை, கடமைகளாலோ, அதற்கு ஒரு விலையை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயம். அந்த எல்லைக்குள் வருகிற கொண்டாட்டங்களைமட்டும் ஏற்றுக்கொண்டு மகிழ்வார்கள், மற்றவற்றைச் சிரிப்போடு ஒதுக்கிவிடுவார்கள். அதனால் தங்கள் அன்புக்குரிய உலகத்தை, தங்களுக்கு ஆதரவளிக்கும் அடித்தளத்தைத் தாற்காலிகமாகப் பகைத்துக்கொள்ளவேண்டியிருப்பதுபற்றி அவர்களுக்குக் கவலை இருப்பதில்லை. அதற்கு எப்பேர்ப்பட்ட பொறுப்புணர்ச்சியும் துணிச்சலும் வேண்டும் என்று தெரியுமா!

அதிலும் குறிப்பாக, இன்றைக்கு எதை வேண்டுமானாலும் உடனடியாக வாங்க வசதியளிக்கிற கடன் பண்பாட்டில் மிகைச் செலவுகள் என்று எவையும் இல்லை என்பதுபோன்ற ஒரு மசங்கல் உணர்வு உண்டாகிவிடுகிறது. அப்படியொரு சூழலில் சுற்றியிருக்கிற “எல்லாரும்” செய்கிற ஒன்று நமக்கு வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கு இன்னும் கூடுதல் துணிச்சலும் தொலைநோக்கும் வேண்டும்.

பெயர் தெரியாத அந்தத் தம்பியை மனமார வாழ்த்தியபடிதான் வண்டியிலிருந்து இறங்கினேன். அதன்பிறகும் இன்று நாள்முழுக்க அவன் நினைவுதான்!

Exit mobile version