Site icon என். சொக்கன்

வகுப்பும் படைப்பும்

நேற்று, பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். வழக்கமான நலப் பகிர்தல்களுக்குப்பிறகு, ‘எல்லாருக்கும் Nonfiction எழுதக் கத்துத்தர்றேன்னு ஃபேஸ்புக்ல அப்பப்ப அறிவிப்பு விடறீங்களே, அந்த வகுப்பெல்லாம் இன்னும் நடக்குதா?’ என்றார்.

‘ஆமா, மாசாமாசம் நடக்குது’ என்றேன்.

‘சரி. ஒருத்தர் உங்க வகுப்புல கலந்துக்கிட்டா உடனடியா ஒரு நல்ல புத்தகம் எழுதிடமுடியுமா?’ என்று சவால் விடுவதுபோல் கேட்டார் அவர்.

அப்போது அவருக்குச் சொல்ல நினைத்த பதிலை இங்கு எழுதுகிறேன்.

நான் என் மனைவியிடம்தான் தேநீர் தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். இன்றுவரை அந்த அறிவுறுத்தல்களை 100% அப்படியே எந்தப் பிசிறும் இல்லாமல் பயன்படுத்துகிறேன். தேநீர் நன்றாகத்தான் வருகிறது. ஆனால், என் மனைவி தயாரிக்கும் தேநீரைப்போல் இருப்பதில்லை.

அதாவது, நான் குறிப்புகளைப் பின்பற்றித் தயாரிக்கும் தேநீரைக் குடிக்கலாம், ஓரளவு ருசிக்கலாம், அவ்வளவுதான். அதற்குமேல் அதில் எந்தச் சிறப்பும் இருக்காது.

ஏனெனில், நான் கற்றுக்கொண்டதைப் பின்பற்றுவதோடு சரி, அதற்குமேல் என் பங்களிப்பு என்று அதில் எதுவும் இல்லை. அதனால், அது ஓர் இயந்திரத் தேநீராகதான் இருக்கும்.

சில நாட்கள் என் மனைவி தேநீர் தயாரிக்கும்போது கவனித்துப் பார்த்துள்ளேன். அவர் எனக்குக் கற்றுத்தந்ததை 40%தான் பின்பற்றுகிறார், மீதி 60% தன் மனநிலை, சூழலுக்கேற்ப மாற்றுகிறார். அதன்மூலம் என்னைவிட விரைவாகவும் தரமாகவும் தேநீர் தயாரித்துவிடுகிறார்.

அந்த நுட்பத்தை நானும் பழகினால், வெறும் நுட்பத்துடன் நிறுத்தாமல் படைப்புணர்வையும் சேர்த்துப் பயிற்சி எடுத்தால் ஒருநாள் என்னாலும் அந்நிலையை எட்ட இயலும்.

எழுத்துப் பயிற்சிக்கும் அதே கதைதான். வெறுமனே கேட்டால் சிறிய பலன், முயன்றால் கூடுதல் பலன், அதற்குமேல் உங்கள் ஆளுமையை அதில் செலுத்திப் பயிற்சியெடுத்தால் மிகப் பெரிய பலன்.

இந்த மாத வகுப்பு ஜூலை 29, 30. வாருங்கள். +91-8050949676 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் செய்தால் வகுப்புபற்றிய எல்லாத் தகவல்களும் உங்களுக்கு வந்து சேரும்.

Exit mobile version