‘கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தெரியல்ல என் காசு போன இடம் தெரியல்ல’ ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கும் அத்தனைபேரும் புலம்பும் புலம்பல் இது.
சம்பாதிக்கும் எல்லோரும் பணத்தினை திறம்பட கையாள்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை. பணம் வந்தவுடன் படபடவென செலவு செய்வோம் கையிருப்பு காலியானதும் முகமும் மனமும் சுருங்கிவிடும். இப்போதைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வழிகாட்டுவதை விட பணத்தினை திறம்பட கையாளக் கற்றுத் தருவதே இன்றியமையாத தேவையாக இருக்கிறது. அப்படி பணத்தினை கையாளக் கற்றுத்தரும் ஒரு நூலைத்தான் நான் சமீபத்தில் படித்தேன்.
எப்போதுமே ஒரு புத்தகத்தினைப் படித்ததுமே அதைப்பற்றி முகநூலில் வாசிப்பனுபவம் எழுதுவது என் வழக்கம். ஆனால், இந்த நூலுக்கு எழுதவில்லை. காரணம் இதில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்களையாவது நடைமுறையில் செய்துபார்த்துவிட்டு இதைப்பற்றி எழுதவேண்டுமென்று இருந்தேன். புத்தகம் சார்ந்து இதுவரையிலான என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
புத்தகம் பணம் சம்பாதிப்பது பற்றி மட்டும் கூறவில்லை, பணம் சார்ந்து உங்களுடைய பழக்க வழக்கங்களில் எவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும், எந்தெந்த இடங்களில் நாம் ஏமாறுகிறோம், எங்கெல்லாம் சலுகைகளைப் பெறத் தவறுகிறோம், நவீன பணபரிவர்த்தனை முறைகளில் எப்படியெல்லாம் நம்முடைய பணத்தினை திறம்பட கையாளலாம் என்பது பற்றியெல்லாம் இந்தப் புத்தகம் விளக்கமாக எடுத்துரைக்கிறது. புத்தகத்தில் எனக்குப்பிடித்த விசயம் என்னவென்றால் படிக்கும்போது கடமுடவென்று இல்லாமல் நம்முடைய அப்பாவோ அல்லது அனுபவசாலியான நம் வீட்டு மூத்தவர்களோ ‘ இந்தாப்பா இப்டியெல்லாம் செய்யப்படாது, இதெல்லாம் கொஞ்சம் மாத்திக்க, இதெல்லாம் உன் எதிர் காலத்துக்கு நல்லது’ என்பது போன்ற எழுத்துநடை வாசிக்க சிறப்பாக இருந்தது.
நடைபாதை வியாபாரிகள், தினக்கூலிகள் முதல் ஐடி ஊழியர்கள் வரை அனைவருடைய, ஏறக்குறைய எல்லோருடைய நிதி மேலாண்மை பற்றியும் பேசும் இந்தப்புத்தகம் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் குறித்தும் பேசியிருக்கலாம். இது மட்டும் எனக்கு சிறிய ஏமாற்றம்.
ஏனெனில், நான் ஒரு அரசு ஊழியர். புத்தகத்தில் நம் பணிக்கான சலுகைகளை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வரிகளைப் படித்தபோதுதான் மண்டையில் உரைத்தது. அதன்பிறகு என்னுடைய மூத்தவர்களிடமும் இணையப் பக்கங்களிலும் தேடி சில பயன்படக்கூடிய சலுகைகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.
புத்தக வாசிப்பிற்குப் பின் நான் மேற்கொண்ட சில மாற்றங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
மளிகை டோர் டெலிவரிக்கு பட்டியல் அனுப்பும்போது சில பொருட்களுக்கு அளவு கொடுக்க மாட்டேன். கடைக்காரர் பெரிய பொருளாகப் பார்த்து தலையில் கட்டிவிடுவார். இப்போதெல்லாம் சரியாக vicco toothpaste 50 gram, RKG ghee 50 gram, shampoo 3 rupees sachets 10 என்பதுபோல் தெள்ளத் தெளிவாக பட்டியல் இடுவதால் சரியான பொருள் கைக்கு வருகிறது. காசும் மிச்சம்.
நானும் பக்கத்து வீட்டு அக்காவும் சேர்த்து மளிகை வாங்குகிறோம். போனஸ் பாயிண்ட் கூடுதலாக கிடைக்கிறது. விலை தள்ளுபடிகளும் கிடைக்கிறது.
அதே போல சின்னச்சின்ன அவசர செலவுகளுக்காக உண்டியல் ஒன்று வைக்க ஆரம்பித்திருக்கிறேன்.
முன்பெல்லாம் Gpay மூலம் பணம் செலுத்துவேன் இப்போது டெபிட் கார்ட் பயன்படுத்துகிறேன். இதில் நமக்கு பாயிண்டுகள் சேர்வதால் அதன் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்ய முடிகிறது காசு மிச்சம்.
ரொம்பவே சின்னச் சின்ன மாற்றங்கள்தான். ஆனால், சேர்த்துப்பார்க்கும்போது பெருத்த லாபம்.
இவ்வாறாக நடைமுறையில் என்னுடைய பணத்தினைக் கையாளும் பழக்கத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் புத்தகம் இது.
‘பணம் படைக்கும் கலை’ புத்தகத்தை வாங்க:
