Site icon என். சொக்கன்

பசுநிலம்

இன்று காலை தூங்கி எழுந்தபோது எம் எஸ் வி குரலில் ‘தாய் நிலம் தந்த வரம் தாவரம், அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்’ என்ற பாடல்* கணீரென்று காதுக்குள் கேட்டது. அப்போதுமுதல் விடாமல் அதையே திரும்பத் திரும்ப முணுமுணுத்துக்கொண்டிருக்கிறேன்.

நம்முடைய மூளை பல நேரங்களில் இதுபோல் எந்தத் தொடர்போ தேவையோ இல்லாமல் ஒரு பாடலை (அல்லது அதில் ஒரு வரியை), ஒரு காட்சியை, ஒரு குரலை, ஒரு முகத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது. பின்னர் அது தானாகச் சென்றுவிடுகிறது. அதற்கும் காரணம் தெரிவதில்லை. அவ்விதத்தில் நாம் எல்லாரும் அசைபோடும் விலங்குகள்தான்போல.

இதுபற்றி இணையத்தில் கொஞ்சம் தேடினேன். Random Memory என்று எதுவும் இல்லை, உங்களுடைய லட்சக்கணக்கான நினைவுகளில் ஒன்றுமட்டும் மேலெழுந்து வருகிறது என்றால் உங்களையும் அறியாமல் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்கிறார்கள்.

ஒருவேளை இது உண்மையென்றால், ‘தாய் நிலம் வந்த வரம் தாவரம்’ பாடல் திடீரென்று எனக்கு நினைவுக்கு வரவேண்டிய தேவை என்ன என்று யோசித்தேன். சிறிது நேரத்துக்குள் புதிர் விலகிவிட்டது.

எங்கள் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல உணவு உண்ணுதல் (Healthy Eating) தொடர்பான ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நிறத்திலான உணவுகளைக் கூடுதலாக உண்ணவேண்டும், அதைப் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யவேண்டும். அதுதான் சவால்.

அந்தச் சவாலில் இந்த வாரம் பச்சை நிறம். அதனால்தான் என்னையும் அறியாமல் என் மனம் (அல்லது மூளை) சிறுவயதில் கேட்ட பசுமைப் பாடலை நோக்கிச் சென்றிருக்கிறது. இதே சூழ்நிலையில் இன்னொருவர் ‘பச்சை மா மலைபோல் மேனி’யையோ ‘பச்சை நிறமே பச்சை நிறமே’வையோ எண்ணக்கூடும், அல்லது, அவர்கள் வயல்வெளியில் வேலை செய்ததையோ, சுற்றுலாவின்போது பார்த்த ஓர் இயற்கைக் காட்சியையோ எண்ணக்கூடும்.

* பின்குறிப்பு: இதைப் படிக்கும் 90s Kids குழம்பவேண்டாம். அன்றைய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வந்த புகழ் பெற்ற ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் அது.

Exit mobile version