Site icon என். சொக்கன்

ஷேக்ஸ்பியர் & உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர் : நூல் விமர்சனம்

ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறு & உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர் ( 17 நாடகங்கள்) இரண்டுமே சிறிய நூல்கள்தான். கிண்டிலில் கிடைக்கின்றன. விறுவிறுப்பான நடையில் சொக்கன் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையையும், 17 நாடகங்களின் சுருக்கத்தையும் இரு நூல்களாகத் தந்துள்ளார். நூல் ஒவ்வொன்றும் சுமார் 100 பக்க அளவில் இருக்கலாம்.

வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் துயரமும், போராட்டமும் கலந்த சுவையான கலவையால் ஆனதுதான். ஷேக்ஸ்பியருக்கு இன்றும் எல்லா வயதிலும் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். 4 நூற்றாண்டுக்கு முந்தையவரான ஷேக்ஸ்பியரைக் குறித்துப் பலவகையான சுவையான தகவல்கள், முரண்பட்ட செவிவழிச் செய்திகள், ஊகங்கள், கற்பனைகள், ஆதாரப் பூர்வமில்லாத பல வகையான செய்திகள் எல்லாம் கிடைக்கின்றன. அவற்றைச் சர்ச்சைகள், குழப்பங்களைத் தவிர்த்து இந்த ‘ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறு’ என்ற இந்த நூலைத் தந்துள்ளார் எழுத்தாளர் என்.சொக்கன்.

எல்லாக் காலக் கட்டங்களுக்குமான மனிதர் என்று ஷேக்ஸ்பியரை பென் ஜான்சன் பாராட்டுகிறார். இலக்கியப்படைப்பு எதுவானாலும் அதன் வெற்றி, தோல்வி உடனடியாக நிர்ணயிக்கப்படுவதில்லை. அதன் பின் வரக்கூடிய தலைமுறைகளின் வாசிப்பில் தான் அது இருக்கிறது. அந்த வகையில் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கக் கூடிய மனிதர்கள் என்பதில்தான் அவருடைய வெற்றி இருக்கிறது என்கிறார் என்.சொக்கன்.

1564 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் என்ற சிறிய ஊரில் ஷேக்ஸ்பியர் பிறந்தார். இளமையில் அவர் பிறந்த போது அவருடைய குடும்பம் நன்கு வசதியாகவே இருந்தது. அவருடைய அப்பாவின் பெயர் ஜான் ஷேக்ஸ்பியர், அம்மாவின் பெயர் மேரி ஆர்டென். ஷேக்ஸ்பியரின் அப்பா ஊர் நிர்வாகத்திலும் மேயர் போன்ற பொறுப்புகளை வகித்து வகித்தார். தோல் பொருட்களைச் செய்து விற்பனை செய்தார் அவர். சில கள்ளத்தனமான தொழில்களிலும், சட்டப்பூர்வமில்லாத கம்பளி வியாபாரத்திலும் ஈடுபட்டு சிறிய தண்டனைகளையும் அவர் பெற்றார். ஷேக்ஸ்பியர் பள்ளியில் லத்தீன், கிரேக்க மொழிகளைக் கற்றுக் கொண்டார். ஞாயிறு சர்ச்சில் பைபிள் வாசித்துப் பயின்றார். இவையெல்லாம் ஷேக்ஸ்பியரை கவித்துவமிக்கவராக, படைப்பாளியாக உருவாக்கி இருக்கலாம். தந்தை வியாபாரத்தில் நொடித்துப் போனதால், பள்ளிப்படிப்பை முழுமை செய்யாமல் 14 வயதிலேயே வியாபாரத்தில் ஈடுபட்டார் ஷேக்ஸ்பியர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வசதி இருந்தும், தந்தையின் வற்புறுத்தலினால் அவர் வியாபாரத்தில் தந்தைக்கு உதவியாக ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கருத்து இருக்கிறது. பிற்பாடு அவரது படைப்புகளை எல்லாம் வாசிக்கும் போது, சிறுவயதில் அவர் தந்தையின் மூலம் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

18 வயது ஷேக்ஸ்பியர் தன்னை விட வயதில் மூத்த ஆனியை 1582 ஆம் ஆண்டு காதல் மணம் செய்கிறார். அவருக்கு 1583ஆம் ஆண்டு ஒரு பெண்ணும், அடுத்து 1585 ஆம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன. 1585 ஆம் ஆண்டு முதல் 1592 முடிய ஷேக்ஸ்பியர் வரலாற்றில் என்ன ஆனார், என்ன செய்தார், எங்கே போனார் போன்ற விவரங்கள் தெரியவில்லை. 1592-ல் லண்டனில் மிகப் பிரபலமான நாடக ஆசிரியராக அறியப் படுகிறார். அவரது ‘ஸானெட்’ எனப்படும் 14 வரி வடிவக்கவிதைகள் அவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தருகிறது. லண்டனில் இவரை ஹென்றி ரியோஸ்லே ஆதரித்து இருக்கிறார். லார்ட் ஸ்ட்ரேஞ்ஸ் மென் & லார்ட் சாம்பர்லேன்ஸ் மென் ஆகிய இரண்டு நாடகக் குழுக்களில் ஷேக்ஸ்பியர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். சிறிய பாத்திரங்களில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். சொந்த ஊரில் இறந்து போன மகனின் மரணம் ஷேக்ஸ்பியரை மிகவும் பாதித்து இருக்கிறது. முதலாம் ராணி எலிஸ்பெத், முதலாம் ஜேம்ஸ் இருவரும் இவரது நாடகத்திற்குத் தீவிர ரசிகர்கள். ஏரளமான பணம் சம்பாதித்து நல்லவிதத்தில் முதலீடு செய்து அதனைப் பெருக்கியிருக்கிறார். 1611 -ல் நாடக உலகில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்ட்டில் வந்து நிரந்தரமாகக் குடியேறினார் ஷேக்ஸ்பியர். உடல் நலமில்லாமல் 1616-ல் தனது 52-வது வயதில் மறைந்தார் ஷேக்ஸ்பியர்.

1592 முதல் 1611 -க்கு இடைப்பட்ட காலத்தில் 37 நாடகங்களை எழுதியுள்ளார் ஷேக்ஸ்பியர். ‘உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர்’ என்ற நூலில் ஷேக்ஸ்பியரின் முக்கிய 17 நாடகங்களின் சுருக்கத்தைத் தந்து முழு நாடகங்களை வாசிக்க நமது ஆவலைத் தூண்டி விட்டு இருக்கிறார் என்.சொக்கன். ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் வெற்றிக்குக் காரணமாக அவரது கவித்துவமான நடை, விறுவிறுப்பான கதை, காதல், நகைச்சுவை, பகடி அடிப்படையில் அமைந்த கதைகள், சமகால வசனங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம் என்கிறார் என்.சொக்கன்.

ஷேக்ஸ்பியர் குறித்து ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவருடைய கையெழுத்துப் பிரதிகளும் கிடைக்கவில்லை. உயிலிலும் தனது நாடக உரிமைகள் குறித்து ஷேக்ஸ்பியர் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆகவே ஸ்ட்ராட்ஃபோர்ட்டில் பிறந்த ஷேக்ஸ்பியரும், நாடக ஆசிரியரும் ஒரே நபர் அல்லர் என்ற வாதமும் உண்டு. உண்மையில் ஷேக்ஸ்பியர் ஆண் இல்லை; அவர் ஒரு பெண்; ராணி எலிஸபெத்தான் அவர் போன்ற வதந்திகளும் உண்டு. எது எப்படி இருந்தாலும் காலத்தை வென்ற நாடகங்களையும், கவிதைகளையும் தந்த படைப்பாளி ஷேக்ஸ்பியர் என்பதில் இருவேறு கருத்து இல்லை.

வாழ்க்கை நூல் வரிசையில், என்.சொக்கனின் ‘ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறு‘ என்ற நூல் மிகச் சிறப்பானது. அத்துடன் 17 நாடகங்களின் சுருக்கத்தைத் தரும் ‘உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர்‘ என்ற நூல் நமக்குக் கூடுதலான மகிழ்ச்சியைத் தருகிறது.

நன்றி: திரு. மந்திரமூர்த்தி அழகு & ‘வாசிப்போம்’ ஃபேஸ்புக் குழுமம்

Exit mobile version