Site icon என். சொக்கன்

ஒரு லட்டு, இரு லட்டு

உங்களுக்குப் பிடித்த ஓர் இனிப்புப் பண்டத்தை நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேர்க்கடலை பர்பி, உங்களுக்கு ஜிலேபி, லட்டு, டோனட் என்று எதுவாகவும் இருக்கலாம்.

இப்போது, உங்களுக்கு அந்தத் தின்பண்டம் தரப்படும். நீங்கள் விரும்பினால் அதை உடனே சாப்பிட்டுவிடலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், நீங்கள் 20 நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தால், அதே தின்பண்டத்தில் இன்னொன்றும் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் இரண்டையும் சாப்பிட்டு மகிழலாம்.

இப்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? கையில் இருக்கிற தின்பண்டத்தை உடனே சாப்பிடுவீர்களா, அல்லது, 20 நிமிடங்கள் காத்திருப்பீர்களா?

வால்டர் மிஷெல் என்ற அமெரிக்க உளவியலாளர் 1972ல் இப்படியொரு பரிசோதனையை நடத்தினார். அந்த ஊர்த் தின்பண்டமான மார்ஷ்மெல்லோ-வின் பெயரால் The Marshmallow Test என்று அழைக்கப்பட்ட இந்தப் பரிசோதனை, குழந்தைகளுடைய மன உறுதி அல்லது சுய கட்டுப்பாட்டைச் சோதித்துப்பார்த்தது. யாரெல்லாம் தங்களுக்குப் பிடித்த தின்பண்டத்தை உடனே சாப்பிடுகிறார்கள், யாரெல்லாம் பொறுமையாகக் காத்திருந்து அதே தின்பண்டத்தை இரண்டாகச் சாப்பிடுகிறார்கள் என்று வால்டர் மிஷெலின் குழுவினர் ஆராய்ந்தார்கள். இந்தத் தகவலையும், அந்தக் குழந்தைகளுடைய பிற்கால வாழ்க்கை எப்படி அமைகிறது என்கிற புள்ளிவிவரத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துச் சில முக்கியமான தீர்மானங்களை முன்வைத்தார்கள்.

அதாவது, கிடைப்பதை உடனே சாப்பிட்டுவிடுகிற குழந்தைகளைவிட, ‘பின்னர் இரண்டாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம்’ என்று பொறுமையாகக் காத்திருக்கிற குழந்தைகள் இன்னும் நன்றாகப் படிக்கிறார்களாம், அவர்களுடைய சமூக, அறிவாற்றல் செயல்பாடுகள் மேம்பட்டிருக்கின்றனவாம், கூடுதல் சுயமதிப்புணர்வுடன் வாழ்கிறார்களாம், தங்களுடைய இலக்குகளை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு எட்டிப்பிடிக்கிறார்களாம், அழுத்தத்தை நன்றாகக் கையாள்கிறார்களாம், இப்படி இன்னும் பல ‘ளாம்’களை அடுக்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆனால், இந்த மன உறுதி ஒருவருக்குப் பிறவியிலேயே வருகிறதா? அல்லது, இதைப் பயிற்சியின்மூலம் கற்றுக்கொள்ள இயலுமா? இந்தக் கோணத்தில் சிந்தித்த வால்டர் மிஷெல் ‘The Marshmallow Test‘ என்ற தலைப்பிலேயே ஒரு பிரமாதமான புத்தகத்தை எழுதியுள்ளார். சிறுவர்கள்மட்டுமில்லை, பெரியவர்களும் மன உறுதியைப் பயிற்சியின்மூலம் பழகிக்கொள்ளலாம் என்று விளக்கி அதற்குப் பல உத்திகளையும் வழங்கியுள்ளார்.

பணியில், தொழிலில், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மன உறுதியும், கட்டுப்பாடும் தேவைதான். ஆனால் அதே நேரம், மிகுதியான மன உறுதியும் மகிழ்ச்சியைத் தராது என்கிறார் வால்டர் மிஷெல். எந்நேரமும் காத்துக்கொண்டே இருக்காமல் அவ்வப்போது அந்த லட்டை உடைத்து வாயில் போட்டுக்கொள்ளவும் வேண்டும்!

Exit mobile version