Site icon என். சொக்கன்

சூரிய மண்டலத்தில் மூன்றாவது கோள்

எந்தச் செய்திக்கும் பின்னணி முக்கியம்தான். ஆனால், இன்றைய இணைய இதழாளர்கள் ரொம்பப் பின்னால் போய்விடுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ‘அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது’ என்று ஒரு செய்தி வருகிறது. அதை இவர்கள் இப்படி எழுதத் தொடங்குகிறார்கள்:

உலகம் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள மூன்றாவது கோளாகும். அங்குள்ள மனிதர்கள் பலருக்குக் கால்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கால்கள் நடப்பது, ஓடுவது என்று பலவிதங்களில் பயன்படுகின்றன.

பந்து என்பது கோள வடிவில் இருக்கும். அதைப் பல வண்ணங்களில் தயாரிக்கலாம். பந்தைக் காலால் உதைத்து விளையாடுவதுதான் கால்பந்து.

அர்ஜென்டினா என்பது தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். இங்குள்ள மக்கள்…

இப்படிச் சகல பின்னணியையும் வழங்கிவிட்டு ஒருவழியாக இவர்கள் முதன்மைச் செய்திக்கு வருவதற்குள் அங்கு ஏழெட்டு விளம்பரங்கள் நுழைக்கப்பட்டுவிடுகின்றன. அதுதான் இவர்களுடைய உண்மையான நோக்கம்.

எல்லா நிறுவனங்களுக்கும் வருமானம் வேண்டும். ஆனால், வாடிக்கையாளரை எரிச்சல்படுத்திச் சம்பாதிப்பது ரொம்ப நாள் நிற்காது. அவன் உங்களைமட்டுமில்லை, எல்லா இணையச் செய்தித் தளங்களையும் ஒதுக்கிவிட்டுப் போய்விடுவான்.

Exit mobile version