Site icon என். சொக்கன்

அகேகே

ஆங்கிலத்தில் FAQ, அதாவது, Frequenty Asked Questions என்று ஒரு புகழ் பெற்ற சொற்கோப்பு இருக்கிறது. அதைத் தமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்று மொழிபெயர்க்கிறார்கள். இதை FAQபோலச் சுருக்கினால் அகேகே என்று அமையும்.

ஆனால், FAQஐ அகேகே என்று சுருக்கும் பழக்கம் தமிழில் பரவலாக இல்லை. நாம் செய்யலாம். ஆனால், பலருக்குப் புரியாது. FAQ அளவுக்கு அது புகழ் பெற, எல்லாருக்கும் புரிய நாளாகும்.

இன்னொரு சிக்கல், தமிழில் பொதுவாக இதுபோன்ற சுருக்கங்கள் கேட்க இனிமையாக இருக்காது. ஆங்கிலத்தின் மொழி / எழுத்து அமைப்பு வேறு. அங்கு சுருக்கங்கள் சரியாகச் செய்யப்பட்டால் மிக எழிலாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, SMART Goals என ஆங்கிலத்தில் ஒரு சுருக்கப் பயன்பாடு உண்டு. இது Simple, Measurable, Achievable, Realistic, Time Bound Goals என்பதன் நயமான சுருக்கம்.

நாம் இதைத் தமிழில் மொழிபெயர்த்தால், எளிய, அளக்கக்கூடிய, செயலாக்கக்கூடிய, சாத்தியமாகக்கூடிய, நேர அடிப்படையிலான இலக்குகள் என்பதுபோல் அமையும். அதை எஅசெசாநே இலக்குகள் என்று எழுதினால் பார்க்கவோ கேட்கவோ நன்றாக இல்லை. (தமிழில் உயிரெழுத்து சொல்லுக்கு நடுவில் வராது என்பது கூடுதல் பிழை.)

அதனால் தமிழ் மட்டம் என்று பொருள் இல்லை. நாம் நேரடியாகத் தமிழில் உருவாக்கும் சுருக்கங்கள் நன்றாக இருக்கும். ஆங்கிலச் சுருக்கங்களை மொழிபெயர்த்தால் அந்தச் சிறப்பு வராது. ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு தன்மைகள், வெவ்வேறு இயல்புகள். கடல் இல்லாத ஒரு நாட்டின் சிறப்பை அதன் கடற்கரை எழிலைக் கொண்டு அளவிடக்கூடாது.

சுருக்கமாக: FAQஐத் தமிழில் FAQ என்றே எழுதலாம், அல்லது “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்று விரித்து எழுதலாம், தமிழில் இதைச் சுருக்கி எழுதவேண்டியதில்லை என்பது என் கருத்து.

Exit mobile version