Site icon என். சொக்கன்

குடைதல்

அகமதாபாதில் மூன்று நாட்களில் சுமார் 150 கிலோமீட்டர் வண்டிப் பயணம், சுமார் 30 கிலோமீட்டர் நடை. வரலாற்றுக் குவியல் என்று சொல்லக்கூடியவகையில் எல்லாத் திசைகளிலும் நினைவுச் சின்னங்கள், கதைகளாக நிறைந்திருக்கிற ஊர். பார்த்தவற்றில் மிகச் சுவையானவற்றைச் சுருக்கமாக எழுதினால்கூட ஒரு சிறு நூலாகிவிடும் என்கிற அளவுக்கு விஷயங்கள், அப்படி ஓடியும் பாராதவை தனிக்கதை.

அலுவல் அழைக்கிறது. வேறொரு நேரத்தில் அனைத்தையும் பொறுமையாக எழுதுவேன். இப்போதைக்கு உங்கள் வாரத்தை இனிமையாகத் தொடங்குவதற்கு ஒரு நகைச்சுவையான விஷயத்தைமட்டும் சொல்கிறேன்.

Dai Halima Stepwell என்ற படிக்கிணற்றிலிருந்து நகரின் மையத்துக்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம். வழியெல்லாம் ஓட்டுநர் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தார்.

எனக்கு ஹிந்தி நன்றாகப் புரியும். ஆனால், இவ்வளவு விரைவாகப் பேசினால் தொடர்ச்சி பிடிபடாது, குழம்பிவிடும். அதனால் அவர் பேசியவற்றுக்குச் சும்மா தலையாட்டிக்கொண்டிருந்தேன்.

வழியில் ஒரு சிறு குறுக்குத்தெரு. அதில் வரிசையாகப் பலப்பல குடைக்கடைகள். அதைப் பார்த்தவுடன், ‘இது குடைகள் நிறைய விற்கப்படுகிற பகுதியா?’ என்று ஓட்டுநரிடம் கேட்டேன்.

அவருடைய ஹிந்தி எனக்குப் புரியாததுபோல், என்னுடைய ஹிந்தியும் அவருக்குப் புரியவில்லை. நான் ‘குடை என்றால் என்ன?’ என்று கேட்பதாக நினைத்துக்கொண்டுவிட்டார்போல. தெருவோரக் கடை ஒன்றைச் சுட்டிக்காட்டி, ‘அதோ பாருங்க, நடுவுல குச்சி, மேல அகலமாத் துணி விரிச்சு இருக்குல்ல? அதுதான் குடை. மழைக்குப் பிடிக்கலாம், வெயிலுக்கும் பிடிக்கலாம், ரெண்டும் இல்லாட்டி மடக்கி வெச்சுக்கலாம்’ என்றார்.

Image by 132369 from Pixabay

நான் என்னுடைய பந்துவீச்சு எதிர்பாராத திசையில் சிக்ஸருக்கு அனுப்பப்பட்டுவிட்டதுபோல் பேசுவதறியாது அமர்ந்திருந்தேன், என்னுடைய கேள்வி அது இல்லை என்று விளக்க முயலலாமா, அல்லது, அது இன்னொரு திசையில் பறந்துவிடுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அவரோ என்னுடைய திகைப்பை வேறுவிதமாகப் புரிந்துகொண்டுவிட்டார். பெங்களூரில் குடை என்பதே கிடையாது என்று தீர்மானித்துவிட்டவரைப்போல் வழியில் ஒவ்வொரு குடையாகச் சுட்டிக்காட்டி, ‘அதோ பாரு, அதுதான் குடை’, ‘இதோ பாரு, இதுவும் குடைதான்’, ‘அது கருப்புக் குடை, இது சிவப்புக் குடை, பூ போட்ட குடைகூட எங்க ஊர்ல உண்டு, கைப்பைக்குள்ள மடிச்சு வெச்சுக்கறமாதிரி குடைகூட இருக்கு’ என்று கடைத்தெரு செல்லும் வழியில் குழந்தைக்குப் பூ, நாய், பூனை, பட்டுப்பூச்சியையெல்லாம் காண்பித்து மகிழ்வூட்டுகிற தாயைப்போல் எங்கள் இடம் வரும்வரை எனக்குக் குடைப்பாடம் எடுத்தார்.

அதன்பிறகு, இரண்டு நாளாக எங்கு குடையைப் பார்த்தாலும் அந்த ஓட்டுநர் நினைவுதான் வருகிறது!

Exit mobile version