Site icon என். சொக்கன்

வழிகாட்டியைத் தேடுங்கள்

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர்கள்/ஓரிரு ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் தங்களுக்கென்று ஒரு வழிகாட்டியை (Mentor) அடையாளம் காண்பதில் நேரம் செலவிடுவது நல்லது. அப்படி ஒருவரை அடையாளம் கண்டபின், வாரம் அரை மணி நேரம் அவருடன் செலவிட்டால் போதும் (சொல்லப்போனால், மாதம் அரை மணி நேரம்கூடப் போதும்). அந்தச் சிறு முதலீடு சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.

இது ஏன் முக்கியம்?

பொதுவான வாழ்க்கையில் பள்ளி, கல்லூரி, திருமணம், குழந்தைகள், சொந்த வீடு என்பதுபோல் ஒரு பாதை தெளிவாக இருக்கிறது. அது சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால் ஏதோ ஒரு பாதை இருக்கிறது. நாம் அதில் நடக்கலாம். அல்லது, பிறர் நம்மை அங்கு தள்ளிவிட்டுவிடுவார்கள்.

பணி வாழ்க்கையில் அப்படிப் பொதுவான பாதை ஏதும் இல்லை. எதற்குப் பின் எது சரியாக இருக்கும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதனால், அப்படி ஒரு பாதையில் (முழுத் தெளிவோடு அல்லது தட்டுத்தடுமாறி) நடந்த ஒருவரிடம் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வது பயன்படும்.

ஒரு வழிகாட்டி போதுமா?

தொடக்கத்தில் போதும். கூடுதல் வழிகாட்டிகளைப் பின்னர் தேவை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

Image by Grégory ROOSE from Pixabay

வழிகாட்டி என் அலுவலகத்தில்/ஊரில்/தெருவில் இருக்கவேண்டுமா?

தேவையில்லை. உங்களுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசக்கூடிய தொலைவில் இருந்தால் போதும். ஆனால், நீங்கள் ஈடுபடும் துறையில் அவர் சிறிதேனும் முன்னால் இருக்கவேண்டும், அதுதான் முக்கியம்.

அந்த வழிகாட்டி நமக்கு ஏன் உதவவேண்டும்? அதனால் அவருக்கு என்ன பயன்?

1. முன்பு அவருக்கு இன்னொருவர் இப்படி உதவியிருப்பார். அந்த நன்மையை அவர் நமக்குத் திருப்பிச்செய்வார்.

2. தன்னைவிட இளைய தலைமுறையில் ஒருவருடன் பழகுவது அவருக்கும் நல்ல கற்கும் வாய்ப்பு.

3. பிறருக்கு உதவுவது இயல்பாக நம் மனத்துக்கு மகிழ்ச்சியை, மன நிறைவை அளிக்கிறது என்று ஆயுவுகள் சொல்கின்றன.

ஒருவேளை நான் பேசுகிற வழிகாட்டி அப்படி நினைக்காவிட்டால்?

பரவாயில்லை. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வேறு வழிகாட்டியைத் தேடுங்கள்.

வழிகாட்டி அமைந்துவிட்டால் அவர் எல்லாம் செய்துவிடுவாரா? நாம் சும்மா உட்கார்ந்திருக்கலாமா?

அவர் வழிதான் காட்டுவார். நடப்பது நம் வேலை. நடப்பதற்கு ஏற்ற கால் வலிமை, சரியான ஷூ போன்றவற்றை உறுதிசெய்வதும் நம் வேலைதான்.

அந்த வழிகாட்டிக்கு நான் காசு கொடுக்கவேண்டுமா?

வேண்டியதில்லை. இந்த மூன்றைச் செய்தால் போதும்:

1. அவருடைய நேரத்தை மதித்துச் சரியான கேள்விகளைக் கேட்டுப் பதில் பெறுவது. அதாவது, தயார் செய்துகொண்டு அவரிடம் பேசுவது.

2. அவர் சொல்கிறவற்றை நீங்கள் என்ன செய்தீர்கள் (அவைபற்றி என்ன தீர்மானம் எடுத்தீர்கள்/எதைச் செயல்படுத்தினீர்கள்) என்பதை அவரிடம் சொல்வது. அவை உங்களுக்குப் பயன்பட்டிருந்தால் மனமார நன்றி சொல்வது.

3. மேலேறியபின் இன்னொருவருக்கு வழிகாட்டியாவது.

நல்ல வழிகாட்டி அமைந்தவர்கள் மிக விரைவாகவும் மிகக் குறைவான காயங்களுடனும் மிகத் தெளிவான பார்வையுடனும் முன்னேறுவார்கள். அதனால், இதில் கண்டிப்பாக முதலீடு செய்யுங்கள். வாழ்த்துகள்.

***

தொடர்புடைய புத்தகம்: நீ உன்னை அறிந்தால்… (பணி வாழ்வில் நுழையும் இளைஞர்களுக்கு அன்போடும் நட்போடும் வழிகாட்டுகிற வெற்றிக் கையேடு) by என். சொக்கன்

அச்சு நூல் வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

கிண்டில் மின்னூல் வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Exit mobile version