Site icon என். சொக்கன்

அட்டையில் ஆண்டவர்

அமேசானில் புதிதாக வெளியாகிற நூல்களை அவ்வப்போது வடிகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னமாதிரியான தலைப்புகளிலெல்லாம் நூல்கள் வருகின்றன, அவற்றுக்கு எப்படிப் பெயர் சூட்டுகிறார்கள், அவற்றின் அட்டைப்படத்தில் என்னென்ன காட்சிகள், வண்ணங்கள் இடம்பெறுகின்றன, அதற்கு என்ன காரணம், எந்தத் தலைப்புகள் நன்கு விற்கின்றன, அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் யோசிப்பது, இந்தச் சந்தையைப் புரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல பயிற்சி. (உங்களுக்கும் இதில் ஆர்வமிருந்தால், நான் பயன்படுத்துகிற ‘புதிய நூல்கள் வடிகட்டி’ (New Books Filter) இங்கே உள்ளது, குறித்துவைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை திறந்து பாருங்கள், ஜாலியாகப் பொழுது போகும்!)

இப்படிப் புதிய நூல்களை ஆராயும்போது எனக்கு வியப்பளிக்கிற ஒரு விஷயம், கிறித்துவ மதம் சார்ந்த நூல்கள் எப்படி முன்வைக்கப்படுகின்றன என்பதுதான்.

உலகெங்கும் பதிப்பிக்கப்படுகிற நூல்களில் ஒரு முக்கியமான சதவிகிதத்தை மதம் சார்ந்த நூல்கள் எடுத்துக்கொள்கின்றன. தமிழிலும் இவை ஏராளமாக உண்டு. சொல்லப்போனால், புத்தகக் கண்காட்சி போன்றவற்றின் விற்பனைப் பட்டியலில் இவையே கணிசமான இடத்தை எடுத்துக்கொள்ளும், பொதுவான நூல்கள் இல்லாத வீடுகளிலும் ராமாயணம், மகாபாரதம், சுலோகங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்கள் இருக்கும், தொடர்ந்து படிக்கப்படும்.

இந்த நூல்கள் அனைத்திற்கும் சில பொதுத்தன்மைகள் உண்டு. அட்டையிலேயே ஓர் இறைவர் இருப்பார், அல்லது, வழிபாடு சார்ந்த அம்சங்கள் (பூஜை மணி, மாவிலைத் தோரணம் போன்றவை) இடம்பெறும், இவற்றைப் பார்த்ததும், அல்லது, புத்தகத்தின் தலைப்பைப் படித்ததும் அதன் தன்மை புரிந்துவிடும், இஸ்லாமிய நூல்களும் பெரும்பாலும் இப்படிதான், என்னிடம் உள்ள ஓரிரு சீக்கிய, புத்த மத நூல்களும் கிட்டத்தட்ட இதேபோல்தான் அமைந்துள்ளன.

ஆனால், பல கிறித்துவ நூல்களுடைய பெயரும் சரி, அட்டைப்படத்தில் இடம்பெறும் படங்கள், குறியீடுகளும் சரி, அது ஒரு மதம் சார்ந்த நூல் என்ற விஷயத்தையே தெரிவிப்பதில்லை. வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, ஏனெனில், தலைப்புக்கு அடுத்து வருகிற துணைத்தலைப்பில் பெரும்பாலும் இயேசுவோ பைபிளோ கிறித்துவமோ கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறார்கள். ஆனால், அட்டைப்படம் அல்லது தலைப்பைமட்டும் வைத்து அது ஒரு மதம் சார்ந்த நூல் என்று யாராலும் ஊகிக்க இயலாது, பொதுவான வாழ்க்கை அனுபவங்கள் அல்லது சுய முன்னேற்ற/தன்னம்பிக்கை நூல் என்றுதான் நினைப்போம்.

யோசித்துப்பார்த்தால், இந்து மதம் சார்ந்த நூல்களும் (ஆங்கிலத்தில்) இதுபோல் வரத் தொடங்கிவிட்டது புரிகிறது. Devduut Pattanaik என்ற புகழ் பெற்ற எழுத்தாளருடைய சமீபத்திய நூல், ‘How to become Rich‘. செல்வத்தின் தெய்வமாகிய ‘திருமகள்’ லட்சுமியைப்பற்றிய வேத, புராணக் கதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஆனால், அட்டைப்படத்தில் லட்சுமியின் ஓவியம் இல்லை. ’12 Lessons I learnt from Vedic and Puranic Stories’ என்ற துணைத்தலைப்பையோ புத்தக விளக்கத்தையோ படித்தால்தான் இது நமக்குத் தெரியவருகிறது.

(பின்குறிப்பு: கமெண்ட்ஸ் பகுதியில் எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் கருத்துகள் வந்தால் நீக்கப்படும்; இது மத நிந்தனைப் பதிவு இல்லை, புத்தக வெளியீட்டு Trendsபற்றிய கவனித்தல், புரிந்துகொள்ளல் பதிவு.)

Exit mobile version