Site icon என். சொக்கன்

தொடர்ந்து எழுதுதல் : கேள்வி பதில்

உள்பெட்டியில் வந்த ஒரு கேள்வி:

நான் கல்லூரியில் படிக்கும்போது நிறைய ஆராய்ச்சி செய்து பல நல்ல கட்டுரைகளை எழுதிவந்தேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் இப்போது நான் படிப்பை நிறைவுசெய்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. கட்டுரைகளை ஊன்றி எழுத நேரம் செலவிட இயலவில்லை. மிகவும் வருத்தமாக, சோர்வாக இருக்கிறது. என்ன செய்யலாம்? நீங்கள் பணியில் இருந்தபடி தொடர்ந்து எழுதிவருவது எப்படி?

என் பதில்:

உங்கள் பணிவாழ்க்கையின் (career) தொடக்கத்தில் பணிக்குக் கூடுதல் நேரம் தரவேண்டியிருக்கும். இப்போது கற்றுக்கொள்வதுதான் பின்னர் பல ஆண்டுகளுக்கு உதவும். அதில் குறை வைக்காதீர்கள். முழு உழைப்பு, சுறுசுறுப்பைக் கொடுங்கள்.

Image by Pexels from Pixabay

அதற்கு நீங்கள் எழுதுவதை நிறுத்தவேண்டாம், எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மாதம் 4 கட்டுரை எழுதிய இடத்தில் 2 எழுதுங்கள், அதற்குப் போதுமான அளவு ஆராய்ச்சி நேரம், எழுத்து நேரத்தைக் கொடுங்கள்.

இது இப்போதுமட்டுமில்லை, வருங்காலத்திலும் பொருந்தும். எப்போதெல்லாம் வேலை அழுத்தம் கூடுகிறதோ, குறைகிறதோ, அப்போதெல்லாம் கட்டுரைகளின் எண்ணிக்கையை (எழுதும் அளவை) இறக்கி ஏற்றுங்கள். இதில் தொடர்ச்சி முக்கியம், எண்ணிக்கை முக்கியமில்லை.

நீங்கள் உங்கள் பணியை நன்கு கற்று, மேலாளர்களுடைய நம்பிக்கையைப் பெற்றபிறகு, இதே வேலைகளை இன்னும் விரைவாகச் செய்வீர்கள், அப்போது நீங்கள் இன்னும் கூடுதலாக எழுதலாம். இந்த மாற்றம் இயல்பாக நடக்கும், இப்போது சொன்னால் உங்களுக்குப் புரியாது, நம்பிக்கை வராது, ஆனால் நம்புங்கள்.

முக்கியமாக, எழுத்து உங்களுக்குப் பிடிக்கும் என்பதால் அதை ஓர் அழுத்தம் குறைக்கும் வால்வைப்போல் பயன்படுத்துங்கள். அதாவது, அலுவல் அழுத்தத்தைக் குறைக்கச் சிலர் டிவி பார்ப்பதுபோல், சினிமா பார்ப்பதுபோல், தண்ணி அடிப்பதுபோல், நீங்கள் எழுதலாம். எழுத்தும் பெரிய வேலைதான். ஆனால், அதை நீங்கள் விரும்பிச் செய்கிறீர்கள் என்றால் அதனால் மந்திரம்போல் உங்கள் அழுத்தம் குறைவதைக் காண்பீர்கள். எனக்குப் பல ஆண்டுகளாக அதுதான் Pressure Release!

Exit mobile version