கற்றல் சுகம் (7)

முன்பெல்லாம், எனக்குப் போரடித்தால், சிறிது ஓய்வு நேரம் இருந்தால் ஃபேஸ்புக், ட்விட்டருக்குச் செல்வேன். என்னுடைய நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும் பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்ப்பேன், அவர்களுடைய இணைப்புகளைக் க்ளிக் செய்வேன், நேரம் ஓடிவிடும்.

குறிப்பாக, செல்பேசியில் இது ஒரு மிகச் சிறந்த வசதியாக இருந்தது. எங்கு காத்திருக்க வேண்டியிருந்தாலும் சட்டென்று இந்த வலைப்பக்கங்களின்மூலம் நேரத்தை ஓட்டிவிடலாம்.

ஆனால், இதில் ஒரு பிரச்னை, இப்படிப் பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்களில் 10%கூட நான் படிக்க/பார்க்க விரும்புகிற விஷயங்களாக இராது. என்னுடைய நண்பர்களுடைய ரசனையும் என் ரசனையும் ஒத்துப்போகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே!

இதனால், எனக்குக் கிடைக்கிற ஓய்வு நேரங்களில் பெரும் பகுதி நான் விரும்பாத விஷயங்களைப் படிப்பதில் சென்றது. இன்னொருபக்கம், நான் கற்றுக்கொள்ள விரும்பும் பல விஷயங்கள் அப்படியே நேரமின்றி உறைந்து நின்றன. ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளை வறட்சியும் கனமழையும் தாக்குவதுபோன்ற உணர்வு.

இதைச் சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன், நான் கற்றுக்கொள்ள விரும்பும் விஷயங்களையும் என் ஓய்வு நேரத்தையும் இணைப்பதற்காக ஓர் அறிதல் பட்டியலை உருவாக்கிக்கொண்டேன்.

‘அறிதல் பட்டியல்’ என்பது அடிப்படையில் ஒரு To Do List, அதாவது ‘செய்யவேண்டிய வேலைகளின் பட்டியல்’தான். ஆனால், இதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் ‘To Know’, அதாவது, அறிந்துகொள்ளவேண்டியவை என்ற வகையில் அமையும்.

இதற்காக, நான் ஒரு வாட்ஸாப் குழுமம் உருவாக்கினேன். அதில் நான்மட்டும்தான் உறுப்பினர். எனக்கு நானே பதிவுகளை அனுப்பிக்கொள்வேன். மற்ற யாருக்கும் அந்தப் பதிவுகள் தெரியாது, ஒருவேளை தெரிந்தாலும் அவை பயன்படாது, ஏனெனில், அவர்களுடைய அறிதல் பட்டியலும் என்னுடைய அறிதல் பட்டியலும் ஒருபோதும் ஒரேமாதிரி இராது.

ஒரு விஷயம், வாட்ஸாப்பில் தனி நபர் குழுமங்களைச் சேர்க்க அனுமதி இல்லை. ஆகவே, குழுவை உருவாக்கும்போது சும்மா பெயருக்கு இன்னொருவரை அதில் சேர்த்துக்கொள்ளவேண்டும், பின்னர் அவரை நீக்கிவிடவேண்டும். இப்போது அது தனி நபர் குழுமமாக மாறிவிடும்.

இங்கு வாட்ஸாப் என்பது ஓர் எடுத்துக்காட்டுதான், நீங்கள் டெலகிராமிலோ, கூகுள் டாக்ஸிலோ, எவர்நோட்டிலோ இந்த அறிதல் பட்டியலை உருவாக்கலாம், சட்டைப்பையில் ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதில் பேனா கொண்டு எழுதிவந்தாலும் சரிதான். இடம் முக்கியமில்லை, பட்டியல் உள்ளதா என்பதும், அது போதுமான அளவு நிரம்பியுள்ளதா என்பதும்தான் முக்கியம்.

அறிதல் பட்டியலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்:

  1. எளிதில் விஷயங்களைச் சேர்க்க இயலுமா?
  2. எப்போது வேண்டுமானாலும் பட்டியலை எடுத்துப் பார்க்க இயலுமா?
  3. படித்தபின் விஷயங்களை விரைவாக நீக்க இயலுமா?
  4. தேடும் வசதி உண்டா?

சரி, பட்டியலை உருவாக்கிவிட்டேன். அதை எப்படிப் பயன்படுத்துவது?

நீங்கள் ஏதோ ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும்போது, அல்லது, ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, அல்லது, யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும்போது புதிதாக ஒரு விஷயத்தைப்பற்றிக் கேள்விப்படுகிறீர்கள், அதைப்பற்றி மேலும் கற்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், உடனே அங்கு தாவ இயலாது. அப்படித் தாவினால், இப்போதைய வேலை பாதிக்கப்படும்.

அந்த நேரத்தில், சட்டென்று அறிதல் பட்டியலை எடுக்கலாம், அந்த விஷயத்தின் பெயரை அல்லது இணைப்பை அதில் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் அதைச் சுத்தமாக மறந்துவிட்டு, இப்போதைய வேலையைத் தடையின்றித் தொடரலாம்.

அதேபோல், இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும்போது பல சுவையான இணைப்புகள் நமக்குக் கிடைக்கும். ஆனால், அவற்றை உடனே படிக்கும் மனநிலை இருக்காது. அவற்றையும் இங்கு சேர்த்துவைக்கலாம்.

இப்படி நாள்முழுக்க, வாரம்முழுக்க, மாதம்முழுக்க நாம் சேர்க்கிற விஷயங்களெல்லாம் நம்முடைய அறிதல் பட்டியலில் பாதுகாப்பாக இருக்கும். கட்டுரைகள், ஒலிப்பதிவுகள், வீடியோக்கள், குறும்பதிவுகள் என நாமே தேர்ந்தெடுத்துத் தொகுத்த பட்டியலாக, நமக்கு நிச்சயம் பிடிக்கக்கூடிய வாசிப்பு வரிசையாக அது இருக்கும்.

மனித மூளை சிந்திப்பதற்கானது, அதை நினைவாற்றல் கருவியாகப் பயன்படுத்தவேண்டாம் என்கிறார் புகழ்பெற்ற ‘Getting Things Donehttps://amzn.to/2NP3gxp‘ நூலின் ஆசிரியர் டேவிட் ஆலென். அறிதல் பட்டியலின் அடிப்படையும் அதுதான்: என்னென்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும் பொறுப்பை வாட்ஸாப்பிடம் (அல்லது, இன்னொரு கருவியிடம்) கொடுத்துவிடுகிறோம். வேண்டிய நேரத்தில் பட்டியலைத் திறந்து பயன்படுத்திக்கொள்கிறோம். எதையேனும் மறந்துவிடுவோமோ என்ற அச்சமோ பதற்றமோ தேவையில்லை.

அறிதல் பட்டியலை எப்படிப் பயன்படுத்துவது?

நமக்கு எப்போது ஓய்வு நேரம் இருக்கிறதோ அப்போது இந்தப் பட்டியலைத் திறக்கலாம், அங்குள்ளவற்றை வரிசைப்படி (அல்லது, நம் விருப்பப்படி) எடுத்துக்கொண்டு கற்கலாம், அதாவது, அங்குள்ள இணைப்பை க்ளிக் செய்து படிக்கலாம், இணைப்பு ஏதும் இல்லாவிட்டால், இணையத்தில் தேடிப் படிக்கலாம், அல்லது, அந்தத் தலைப்பு சார்ந்த ஒரு வல்லுனரிடம் பேசலாம். நமக்கு மனநிறைவளிக்கும் அளவுக்குப் படித்தபிறகு, அந்தத் தலைப்பை அங்கிருந்து அழித்துவிடலாம்.

இதில் ஒரு மிகச்சிறந்த நன்மை, நமக்குக் கிடைக்கும் நேரம் ஐந்தே நிமிடமாக இருந்தாலும் அதற்கேற்ற ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு கற்கலாம், அந்த நேரத்தைப் பயனுள்ளவகையில் செலவிடலாம். யாரோ பகிர்கிறார்கள் என்பதற்காக விரும்பாத விஷயங்களைப் படிக்கவேண்டிய கட்டாயமில்லை.

முக்கியமாக, இந்தப் பட்டியலின் நீளத்தைக் குறித்து நமக்குக் கவலையே கூடாது. சொல்லப்போனால், இந்தப் பட்டியல் நீளமாக இருக்கிறதே என்று நாம் மகிழவேண்டும், அதில் மேலும் மேலும் சிறிய, பெரிய விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே செல்லவேண்டும், கற்றலுக்கு நிற்றலே கிடையாது!

அது சரி, கற்றல், கற்றல் என்று திரும்பத்திரும்பப் பொதுவாகப் பேசுகிறோமே, அந்தக் கற்றலுக்கென்று ஒரு வழிமுறை உண்டா? கிடைக்கிற சில நிமிடங்களில் ஒரு தலைப்பை ஓரளவுக்குக் கற்றுக்கொள்வது எப்படி?

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *