Site icon என். சொக்கன்

கையைக் கட்டு

சிறுவர்களுக்குச் சதுரங்கம் கற்பிக்கும்போது அவர்கள் தங்களுடைய கைகளின்மீது உட்கார்ந்து விளையாடவேண்டும் என்று சொல்வார்களாம். அதாவது, இரண்டு கைகளையும் நாற்காலிமீது வைத்து, அதன்மீது அமர்ந்துகொண்டுதான் அடுத்த அசைவைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். அப்போதுதான் மனத்துக்குத் தோன்றுகிற முதல் நகர்வைச் சட்டென்று செய்துவிடாமல் இன்னும் சிறிது சிந்திப்போம், அதைவிடச் சிறந்த இன்னொரு நகர்வு தோன்றும். அவ்வாறின்றிக் கைகள் பலகைக்கு அருகில் இருக்கும்போது நாம் நிறையப் பிழை செய்யக்கூடும்.

இந்தப் பழக்கத்தைச் சின்ன வயதிலிருந்து கற்றுக்கொண்டால், எந்த நகர்வையும் பதற்றமின்றிப் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படும் பழக்கம் வந்துவிடும். அதன்பிறகு, மனம் போன போக்கில் கைகள் போகாது, அவற்றின்மீது உட்காரவேண்டியதில்லை.

என்ன அழகான உத்தி! எல்லா வேலைகளிலும் இதைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, சில கடுப்பேற்றும் அலுவலக மின்னஞ்சல்களைப் படிக்கும்போது, பதில் எழுது எழுது என்று கை துறுதுறுக்கும்போது இப்படிக் கைகளின்மீது உட்கார்ந்துகொண்டால் நிறைய நேரம் மிச்சமாகும், நிம்மதியும் கிடைக்கும்.

***

English Version of this article

Exit mobile version