கார்ப்பரேட் உலகம் கவர்ச்சிகரமானது, பலருக்குத் திருப்புமுனையாக அமைவது, அவர்களுடைய குடும்பத்தின் சமூக நிலையை, பொருளாதார நிலையை முன்னேற்றிக் கை கொடுப்பது, திறமையை நம்பி முன்னேறினோம் என்கிற பெருமிதத்தை, தன்னம்பிக்கையை அளிப்பது.
உண்மையில், இங்கு வெல்வதற்குத் திறமையுடன் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின்றன. பிறருடன் இணைந்து பணியாற்றுகிற நுட்பங்கள், பன்முகத்தன்மை, தொடர்ந்த கற்றல், குழுவாகச் செயல்படுதல், அதே நேரம் தன்னுடைய சொந்த ஆளுமையை நிலைநிறுத்துதல், நேரத்தைச் சரியாகக் கையாளுதல், விமர்சனங்களை எதிர்கொள்ளுதல், பிறரைக் கைதூக்கிவிடுதல், வருங்காலத்துக்காகத் திட்டமிடுதல், மாற்றங்களைக் கையாளுதல், இன்னும் பலப்பல.
ஆனால், புதிதாக இங்கு நுழைகிற ஓர் இளைஞருக்கு இதெல்லாம் சட்டென்று புரிந்துவிடாது. காரணம், இதையெல்லாம் நம்முடைய பள்ளி, கல்லூரிகளோ, நிறுவனங்கள் வழங்குகிற பயிற்சிகளோ சொல்லித்தருவதில்லை. தெரிந்தவர்கள் யாரிடமாவது பார்த்து, கேட்டு, கவனித்துக் கற்றுக்கொண்டுதான் முன்னேறவேண்டும்.
இந்த நுட்பங்களெல்லாம் பயிற்சியால் வருகிறவை என்பது உண்மைதான். ஆனால், இவை ஏன் நமக்குத் தேவை என்கிற அடிப்படைப் புரிந்துகொள்ளலும், இவற்றை எப்படிக் கற்றுக்கொள்வது என்கிற சிந்தனையும் இல்லாவிட்டால் அந்தப் பயிற்சி இன்னும் சிரமமாகிவிடும். அந்தச் சிரமத்தைக் குறைப்பதுதான் இந்த நூலின் குறிக்கோள்.
வேலை வாய்ப்பு கிடைத்துப் பணி வாழ்வில் நுழையும் இளைஞர்களுக்கு அன்போடும் நட்போடும் வழிகாட்டுகிற வெற்றிக்கையேடு இது. குழப்பாமல், கடினமான சொற்களைத் தூவி அச்சுறுத்தாமல் இனிமையான மொழியில் அனுபவக் கதைகளின் வாயிலாகக் கற்றுத்தருகிற இந்தக் கட்டுரைகள் ‘கல்கி’ இதழில் தொடராக வெளியானபோது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றன.
மாணவர்கள், வேலை தேடிக்கொண்டிருக்கிறவர்கள், இப்போதுதான் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் கையில் வாங்கியுள்ளவர்கள், கார்ப்பரேட் உலகில் மெதுவாக நடந்து பழகிக்கொண்டிருப்பவர்கள் என எல்லாருக்கும் இந்நூல் பயன்படும், அவர்களுடைய வெற்றிப்பயணத்தை விரைவாக்கும்.