எழுத்து வழிகாட்டல் (Writing Coach Service)

நான் ஒவ்வொரு காலாண்டிலும் (3 மாதங்களுக்கு ஒருமுறை) 2லிருந்து 3 பேருக்கு எழுத்து வழிகாட்டியாகச் (Writing Coach) செயல்பட்டுவருகிறேன். இதுவரை தனிப்பட்ட வட்டத்தில்மட்டும் செய்துகொண்டிருந்த இந்தப் பணியை இப்போது பொதுவில் அறிவிக்கிறேன். இது மேலும் பலருக்குப் பயன்படும் என்று நம்புகிறேன்.

அதென்ன எழுத்து வழிகாட்டி?

கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வழிகாட்டிகள் என்ன செய்வார்கள் என்று பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எழுதுவோருக்குச் செய்வதுதான் எழுத்து வழிகாட்டி. அதாவது, என்ன எழுதுவது, எப்படி எழுதுவது, நம்மிடம் என்ன குறை, அதை எப்படிச் சரிசெய்வது என்கிற குழப்பத்தில் உள்ளவர்களுடன் சுமார் 90 நாட்கள் பயணம் செய்து தெளிவைக் கொண்டுவருவது, சரியான திசையில் செலுத்துவது.

இதை எப்படிச் செய்வீர்கள்?

வழிகாட்டல் என்பது ஓர் 1:1 வேலை. அதாவது, ஒருவருக்கொருவர் உரையாடவேண்டியது. ஒருவருக்குச் செய்வது இன்னொருவருக்குச் சரிப்படாது. ஒவ்வொரு மாணவருக்கும் நான் என்ன செய்கிறேன் என்பது அவரவர் இலக்குகள், எதிர்பார்ப்புகள், திறமைகள், இடைவெளிகள், தேவைகள், வாழ்வியல் கட்டாயங்களைப் பொறுத்து என்னுடைய வழிகாட்டல் வழிமுறை மாறும். எனினும், பொதுவாக இதில் இடம்பெறுகிறவை இவை:

என்னுடைய வழிகாட்டல் எங்களுக்கிடையிலான ஒரு நீண்ட அறிமுக உரையாடலுடன் தொடங்கும். அடுத்த காலாண்டுக்கு, அதாவது, சுமார் 90 நாட்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்த உரையாடலின் முடிவில் தீர்மானித்துக்கொள்வோம். அதன்பிறகு, அவர் எழுதத் திட்டமிட்டிருக்கின்றவற்றைச் செழுமைப்படுத்த உதவுகிறேன், எழுதியவற்றைப் படித்துத் திருத்தங்கள், மேம்பாடுகளைச் சொல்கிறேன், அடுத்தடுத்த வடிவங்களையும் படித்து ஒப்பிடுகிறேன், இடையில் அவர்களுக்கு எழக்கூடிய எழுத்து தொடர்பான கேள்விகளைத் தெளிவுபடுத்துகிறேன், பதிப்பகங்களைத் தொடர்புகொள்வது, அவர்களுடைய Terms & Conditionsஐப் புரிந்துகொள்வது போன்றவற்றில் உதவுகிறேன்.

இவ்வளவுதான் என்றில்லை. தேவையைப் பொறுத்து இது மேலும் நீளலாம், சுருங்கலாம்.

இதை எப்படிச் செய்கிறீர்கள்?

வாரந்தோறும் Google Meet மூலம் ஒரு விரிவான ஆடியோ அழைப்பு. மற்ற நாட்களில் WhatsApp மூலம் கேள்வி, பதில்கள். அவர்கள் எழுதியவற்றை எடிட் செய்யும்போது, எதைத் திருத்துகிறேன், ஏன் திருத்துகிறேன் என்று உரக்கச் சொன்னபடி எடிட் செய்வேன், அதை Screen Recorder பயன்படுத்தி வீடியோவாகப் பதிவு செய்து அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். இதன்மூலம், என்னுடைய அறிவுறுத்தல்கள் அனைத்தையும் அவர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து, கேட்டுப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த 90 நாட்களுக்குள் நாங்கள் நேரில் சந்திக்க வாய்ப்பு அமைந்தால் சந்திக்கலாம். ஆனால், அது பெரும்பாலும் தேவைப்படாது.

யாரெல்லாம் இந்த வழிகாட்டுதலைப் பெறுகிறார்கள்?

பெரும்பாலும் நூல் எழுத விரும்புகிறவர்கள்தான் என்னுடைய வழிகாட்டலை நாடுகிறார்கள். ஆனால், அலுவல் சார்ந்த எழுத்தைக் கூர்மைப்படுத்துவதற்கென வருகிறவர்களும் உண்டு. அதற்கேற்ப நாங்கள் வழிகாட்டலை மாற்றியமைத்துக்கொள்வோம்.

இதற்கு 90 நாட்கள் போதுமா?

பெரும்பாலும் போதும். 90 நாட்களுக்குப்பின், தேவைப்பட்டால் அவர்கள் இன்னொருமுறை (மேலும் 90 நாட்கள்) இதைத் தொடரலாம். அதற்குமேல் என் உதவி அவர்களுக்குத் தேவைப்படாது.

இது கட்டணச் சேவையா?

ஆம். உங்கள் எழுத்தை மேம்படுத்த நீங்கள் ஒரு நியாயமான தொகையை முதலீடு செய்யவேண்டியிருக்கும். nchokkan+bookcoach@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், விவரங்களை அனுப்புகிறேன்.

பணம் செலவழித்தால் நான் நல்ல எழுத்தாளன் ஆகிவிடுவேனா?

இல்லை. உங்கள் பணத்தைவிட, நேர முதலீடுதான் இங்கு முக்கியம். என்னால் வழிகாட்டத்தான் இயலும், பிரம்பால் அடித்து உங்களை வேலை செய்யவைக்க இயலாது. நான் வழிகாட்டுகிற உத்திகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்கிறவர்கள்மட்டும்தான் இதன்மூலம் மேம்படுவார்கள். இதன் வெற்றி முழுக்க முழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது.

எனக்கு 90 நாட்கள் உதவி தேவைப்படாது. எனக்குச் சில சிறிய உதவிகள்தான் தேவை. அதற்கேற்ப இந்த வழிகாட்டுதலை ஒரு வாரம், ஒரு மாதம் என்று சுருக்கிக்கொள்ளலாமா?

இதுவரை பலருக்கு வழிகாட்டிய அனுபவத்தில் சொல்வதென்றால், பொருளுள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்குக் குறைந்தது 90 நாட்கள் தேவைப்படுகின்றன. அதைவிடக் குறைவான வழிகாட்டுதல் பெரும்பாலும் பயன்படாது.

நீங்கள் அவ்வளவு நாள் இதில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், என்னுடன் ஒரு மணி நேர உரையாடல் ஒன்றைப் பதிவுசெய்துகொள்ளலாம். அதற்கும் nchokkan+bookcoach@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள், விவரங்களை அனுப்புகிறேன்.