பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.
இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.
மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா?
அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும். அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்டு’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.