நல்ல தமிழில் எழுதுவோம்

· பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?

· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? · ‘செமயா இருக்கு மச்சி’ என்கிறோமே, அதென்ன ‘செம’?

· அதிக சலுகை, அதிகச் சலுகை: எது சரி?

· ‘வேகமாகத் தட்டச்சினேன்’ என்று எழுதலாமா?

· திருவையாறில் தியாகராஜ ஆராதனை. சரி, ஆறிலா? ஆற்றிலா?

· வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்?

· ஒருவன் சரி; இருவன் என்று சொல்லலாமா?

· ‘இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா?

வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம்.

உங்களை செய்யுள் எழுத வைப்பதல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி அன்றாட வாழ்வில் இலக்கணச் சுத்தமாக நல்ல தமிழில் எழுத வைப்பதே இதன் நோக்கம். நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்கள், இலக்கிய உதாரணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து திரைப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றையும் சுவாரஸ்யமான உதாரணங்களாகப் பயன்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

இன்றைய தலைமுறைக்குத் தமிழை எளிதாக அறிமுகப்படுத்தும் நூல். தமிழுக்கும்கூட இன்றைய தலைமுறையினரின் அறிமுகம் இதன்மூலம் கிடைக்கக்கூடும்.