ஆங்கிலத்தில் ‘பிஸினஸ் நாவல்’கள் மிகப் பிரபலம். சாதாரணமான சுய முன்னேற்ற விஷயங்களில் ஆரம்பித்து, சிக்கலான மேலாண்மை நுட்பங்கள்வரை, சகலத்தையும் நூற்றுச் சோச்ச பக்கங்களுக்குள் விறுவிறுப்பான கதை வடிவத்தில் விவரிக்கும் நூல்கள் அங்கே தினந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
பிஸினஸ் நாவல்களின் ஸ்பெஷாலிட்டி, அவற்றை வாசிப்பதற்கு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ போதும். அந்தக் கதையினூடே நாம் தெரிந்துகொள்ளும் விஷயங்கள், அந்தந்தச் சம்பவங்கள், பாடங்களுடன் மனத்தில் அழுந்தப் பதிந்துவிடும். அதனால்தான் பெரிய பேராசிரியர்கள், மேனேஜர்கள், சிஇஓக்கள்கூட, எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்வதென்றால், முதலில் பிஸினஸ் நாவல், அப்புறம்தான் உரைநடைப் புத்தகங்கள் என்று தேடுகிறார்கள்.
தமிழில் பிஸினஸ் நாவல்களை அறிமுகப்படுத்திய முதல் முயற்சி, ‘அடுத்த கட்டம்’. குங்குமம் வார இதழில் தொடர்கதையாக வெளியாகி எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான உத்திகளைச் சுவையான கதைப்போக்கினுள் பொதித்துவைத்துச் சுவைக்கத் தருகிறது.