மகாத்மா காந்தி தன்னைப் பின்பற்றுவோர்க்கு வகுத்தளித்த 14 கொள்கைகள் பற்றி எளிமையான தெளிவான வழிகாட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டு உள்ளபடியே அனைத்து கொள்கைகளும் எளிமையான உதாரணங்கள் மூலம் தெளிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். இதில் மகாத்மா காந்தியுடைய from Yerwada Mandir என்ற நூலில் விளக்கியுள்ள 14 பண்புகளை ஆசிரியர் ஒவ்வொன்றாக எடுத்து உதாரண மூலம் காந்தியின் கொள்கைகளை மனதில் புரியும் வண்ணம் அலசி இருக்கிறார்.
அந்த 14 கொள்கைகள் பின்வருமாறு:
- உண்மை
- அகிம்சை /அன்பு
- மனக்கட்டுப்பாடு
- உணவு கட்டுப்பாடு
- திருடாமல் இருத்தல்
- சொத்து சேர்க்காமல் இருத்தல்
- அச்சமின்மை
- தீண்டாமையை அகற்றுதல்
- உழைத்து உண்ணுதல்
- அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல்
- பணிவு
- உறுதிமொழிகள்
- யாகம், தியாகம்
- சுதேசி கொள்கை
இந்நூலின் மூலம் சத்தியாகிரகம் என்ற வார்த்தை ஏற்பட காரணமான நிகழ்வு ,மகாத்மா காந்திக்கு பிடித்த வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலின் பொருள் போன்றவற்றை நான் அறிந்து கொண்டேன். மேலும் மகாத்மா காந்தி அவர்களின் மன உறுதி பற்றி ஆழமாக புரிந்து கொள்ள உதாரணங்கள் இதில் கூறப்பட்டுள்ளது.கடைசியாக நூலின் இறுதியில் காந்தியின் வழியை நாம் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டியதில்லை அவரை கேள்வி கேட்கலாம் எதிர்த்து வாதிடலாம் அதன் பிறகு சரியாக தோன்றுகிறவற்றை பின்பற்றலாம். இவை அனைத்துக்கும் தேவையான குறிப்புகளை அவர் எழுதி வைத்திருக்கிறார். தன்னுடைய திறந்த மனத்தால் அன்பு நிலைகளால் தொடர்ந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். என்று ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார் காந்தி பற்றி நூல்களை, காந்தியத்தை பற்றி தேடி மேலும் படிக்க என்னுள் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது. குறிப்பிட்டுள்ள அனைத்து பண்புகளுள் என்னை மிகவும் கவர்ந்தது உறுதிமொழி பற்றி குறிப்பிடும் போது உறுதிமொழி எடுக்கும்போது இயன்றவரை என எடுக்கக்கூடாது எப்போதும் என எடுக்க வேண்டும் என காந்தி வலியுறுத்தியுள்ளார் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ள உதாரணம் மிக அருமை.
இக்கருத்து என் மனதினுள் பசுமரத்தாணி போல் பதிந்தது .
என் சொக்கன் அவர்களின் நூல்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவருடைய தெளிந்த நீரோடை போன்று தன் கருத்துக்களை எளிய உதாரணங்கள் மூலம் விளக்கம் பாங்கு மிக அருமையாக உள்ளது தற்போது நான் சொக்கன் அவர்களின் அனைத்து நூல்களையும் தேடித்தேடி படிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.
காந்தியின் எளிமையைப் போல அட்டை படத்தில் அமைந்துள்ள காந்தியின் கோட்டோவியமும் மிக எளிமையாக நேர்த்தியாக உள்ளது மகிழ்ச்சி.
இந்த விமர்சனம் ‘வாசிப்போம் நேசிப்போம்’ குழுவில் வெளியானது. அதன் மூலப் பக்கம் இங்கு உள்ளது.
‘காந்தி வழி’ நூலை வாங்க:


