அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப்பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம். என். சொக்கனின் இந்தப் புத்தகம் ஊஆஐ என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.