என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் பிறந்து (ஜனவரி 17, 1978) வளர்ந்த சொக்கன் கோவையில் பொறியியல் கற்றவர், மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கடந்த இருபதாண்டுகளாகப் பெங்களூரில் வசித்துவருகிறார்.
சிறுவயதிலிருந்தே படிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட சொக்கன் பள்ளி நாட்களிலேயே கதைகளை எழுதத் தொடங்கிவிட்டார், 1997ல் அவருடைய முதல் சிறுகதை வெளியானது. அதன்பிறகு, தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்களை எழுதத் தொடங்கினார்.
2003ம் ஆண்டு, சொக்கனுடைய முதல் நூல் (ஒரு பச்சை பார்க்கர் பேனா: சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்நூலின் முன்னுரையில், ’இவர் பார்வையில் நகரமும் தொழில் தொடர்பான உறவுகளும் அலைச்சல்களும் ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் அழகாக விரிகின்றன, கூடவே, சக மனிதன்பற்றிய கரிசனமும்’ என்று சொக்கனுடைய கதைகளை அறிமுகப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் இரா. முருகன்.
அதே ஆண்டில் சொக்கன் தன்னுடைய முதல் புனைவல்லாத நூலையும் (கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு) எழுதினார். அடுத்த ஆண்டு (2004) வெளியான அவருடைய ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’ வாழ்க்கை வரலாற்று நூல் மிகப்பெரிய வெற்றியடைந்து விற்பனைச் சாதனைகளைப் புரிந்தது, அதைத் தொடர்ந்து பல வாழ்க்கை வரலாறுகள், நிறுவன வரலாறுகளை எழுதத் தொடங்கினார். விரிவான ஆய்வுகள், சான்றுகளின் அடிப்படையிலான ஆழமான வரலாற்று நூல்களைத் தமிழில் எழுத இயலும், அவற்றைப் பெரும்பான்மை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கவும் இயலும் என்பதைப் பலமுறை நிரூபித்த எழுத்து வகை இவருடையது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் சொக்கனுடைய நூல்கள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
என். சொக்கன் நூல்களை இங்கு பெறலாம்.