சங்கத் தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டு வகையின்கீழ் வரும் ஒரு சிறிய, அழகிய நூல் ”நெடு நல் வாடை”.
வாடை என்பது வடக்கிலிருந்து வரும் காற்று. அதனை ‘நெடு’ (நீண்ட) மற்றும் ‘நல்’ (நல்ல) என்ற அடைமொழிகளைச் சேர்த்து ஒரு சுவாரஸ்யமான தலைப்பு வைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார்.
இருநூறுக்கும் குறைவான வரிகளைக் கொண்ட இந்தச் சிறு நூலில் கதை என்று பார்த்தால் பெரிதாக ஏதும் இல்லை. குளிர் அடிக்கிறது, அதை எல்லாரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று வர்ணித்துவிட்டு, ஓர் அரண்மனையைக் காட்டுகிறார், அங்குள்ள தலைவி தன் காதலனைப் பிரிந்து துயரப்படுகிறாள் என்பதைச் சொல்கிறார். அவளை விட்டுப் பிரிந்து சென்ற காதலன் இருக்கும் போர்ப் பாசறையைக் காட்டுகிறார், அங்கே அவன் என்ன செய்கிறான் என்பதை விவரிக்கிறார். அதோடு திடுதிப்பென்று ’நெடு நல் வாடை’ நிறைவடைந்துவிடுகிறது.
சாதாரணமாகவே வாடைக் காற்று வாட்டும் இயல்பு கொண்டது. குளிர் நேரத்தில் காதலனைப் பிரிந்திருக்கும் காதலியை அது எப்படித் துன்புறுத்தும் என்பதை நுணுக்கமாக விவரிக்கும் நக்கீரனார், ‘நல் வாடை’ என்று ஏன் இந்த நூலுக்குப் பெயர் வைக்கவேண்டும்? அவளைப் பொறுத்தவரை அது ‘மோசமான வாடை’ அல்லவா? போதாக்குறைக்கு ‘நெடு வாடை’யாக நீண்ட நாள் அவளைத் துன்புறுத்துகிறதே!
இதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். எனக்குப் பிடித்த விளக்கம் இது: காதலர்கள் சேர்ந்திருக்கும் நேரத்தைவிட, பிரிந்திருக்கும்போதுதான் அவர்களுக்கு இடையிலான அன்பு ஆழமாகும் என்று சொல்வார்கள். அந்தவகையில், வாடைக்காற்று அவர்களுக்கு ‘நல்’லதும் செய்கிறது. ஆகவே, ‘நெடு’ + ‘நல்’ வாடை!
பெயர்க் காரணம் எதுவானால் என்ன? நமக்கு ஒரு ‘நல்’ல நூல் வாசிக்கக் கிடைத்துள்ளது. அது ‘நெடு’ நூலாக இல்லாவிட்டாலும், வெறும் 188 அடிகளில் அன்றைய தமிழகத்தைப்பற்றியும் மக்களின் வாழ்வியல்பற்றியும் பல நுட்பமான விவரங்களை இதில் தெரிந்துகொள்ள முடிகிறது.
உதாரணமாக, அன்றைய மக்கள் இறைவனைத் தொழுவதற்கு நெல் தூவினார்கள், மலர் தூவினார்கள் என்று ஒரு வரி, வீட்டின் வாயில் நிலையில் தெய்வம் இருப்பதாக நம்பி அதற்கு நெய், வெள்ளைக் கடுகு பூசி வழிபட்டார்கள் என்று ஒரு விவரம், குளிர் தரும் சந்தனத்தைக் குளிர் காலத்தில் அரைக்கமாட்டார்கள், பூசமாட்டார்கள் என்று போகிறபோக்கில் ஒரு குறிப்பு, குளிரால் யாழின் நரம்புகள் சரியாக ஒலிக்காமல் இருக்க, அவற்றை வாசிக்கும் பெண்கள் தங்களுடைய மார்போடு அந்த நரம்புகளைத் தழுவி, அந்தச் சூட்டில் நரம்புகளை tune செய்கிறார்கள் என்று ஒரு காட்சி, போரில் காயம் பட்ட வீரர்களை நள்ளிரவு நேரத்தில் சந்தித்து ஆறுதல் சொல்லும் மன்னனைப்பற்றி ஒரு பத்தி…
நான் வாசித்து ரசித்த ‘நெடு நல் வாடை’யை எனக்குப் புரிந்த அளவில், எளிய வடிவில் பகிர்ந்துகொள்ளும் முயற்சி இது. பிழைகள் இருந்தால் மன்னியுங்கள், சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன்.
இது உங்களுக்குப் பிடித்திருந்தால் நக்கீரனாரின் சொற்களிலேயே இப்பாடலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள், அது ஒரு தனி அழகு, உரையெல்லாம் அதற்கு உறை போடக்கூடக் காணாது!