பிரதீப் செல்லத்துரை எழுதிய ‘பணக்குட்டி’ நூலைப் படித்தேன்.
உண்மையில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘குட்டி போடும் பணம்’ என்று இருக்கவேண்டும். நம்முடைய பணத்தைப் பலமடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற பொதுத் திரியை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பகுதி, நுனிப்பகுதி, நடுப்பகுதி என அனைத்தையும் அழகாக எழுதியிருக்கிறார். எங்கும் பேராசைக்கான தூண்டல் இல்லை. சொல்லப்போனால், பண விஷயத்தில் ஆசையைக் கட்டுப்படுத்தினால்தான் அறிவு வேலை செய்யும் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு, இதன் வடிவம். நூறு தலைப்புகள், ஒவ்வொன்றும் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் என்ற அளவில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால், நிதி வயலில் அகல உழுவதற்குப் பயிற்சியளிக்கிறது.
அதே நேரம், சில இடங்களில் அந்தச் சிறப்பே இந்நூலின் குறையாகவும் மாறிவிடுகிறது. எல்லாவற்றையும் ஒரு பக்கத்துக்குள் சொல்லிவிடவேண்டும் என்கிற துடிப்பில் சில தலைப்புகளைச் சற்று ஓட்டமாகப் பேசிவிடுகிறார், நாம் அவரோடு சேர்ந்து ஓடமுடியாமல் மூச்சு வாங்குகிறோம்.
ஆனால், இந்தச் சிக்கல் மிகச் சில கட்டுரைகளில்தான். நூலின் பெரும்பகுதியில் வடிவமும் உட்பொருளும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. குறிப்பாக, பிரதீப் செல்லத்துரையின் மொழி, நுட்பமும் எளிமையும் சரியான அளவில் கலந்த கலவையாக இருக்கிறது, சிக்கலான கருத்துகளைக்கூட எளிதில் புரியவைத்துவிடுகிறது. இந்தப் பெருந்தலைப்பில் குறிப்பிடக்கூடிய பல நூல்களை இவர் எழுதுவார் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்.
(பணக்குட்டி : பிரதீப் செல்லத்துரை : வி கேன் புக்ஸ் வெளியீடு : ரூ 180)
இந்தப் புத்தகத்தை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.